”முழுமையாக இந்தியாவை குறை கூறுவதிலும் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதிலும் அர்த்தமில்லை!” புளொட் தலைவர் த சித்தார்த்தன் – நேர்காணல்

Darmlingam_Sitharthan”முழுமையாக இந்தியாவை குறைகூறுவதிலும் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதிலும் அர்த்மில்ல!” என புளொட் தலைவர் த சித்தார்த்தன் கேசரி இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கா துவான் நஸீருக்கு வழங்கிய நேர்காணலில் ”நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.” என த சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

த சித்தார்த்தன் உடனான நேர்காணல்:

கேள்வி : உரிமைகளுக்கு போராடும் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட கட்சி அமைப்புகள் உருவாகி ஒரு இலக்கு சார்ந்த கருத்தொருமைப்பாடு என்பது மழுங்கிவரும் நிலையில் உரிமைகளுக்கான தீர்வு காணல் எனும் விடயத்தில் அதன் தாக்கம் பாரதூரமானதாக அமையும் அல்லவா?

பதில் : விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை பிரகடனப்படுத்தி பலரை பயத்திலோ அல்லது நயத்தாலோ தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். சிங்கள அரசியல் தரப்புகள்கூட புலிகளின் இந்த நிலைப்பாட்டை விரும்பியிருந்தன என்பது போலவே எனக்கு அன்று தெரிந்தது. இதற்குக் காரணம் இருந்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்ற நிலைப்பாட்டை இத் தரப்புகள் விரும்பியதன் காரணம் மிக இலகுவாக ஒரு தீர்வைக் காண்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதியமையாகும். விடுதலைப் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வரமாட்டார்கள் எனவே நாம் தீர்வைக் காண்பதில் அர்த்தம் இல்லை என்று பல தலைவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். இத் தரப்புகள் இதனை ஒரு சாட்டாக சர்வதேச தரப்புகளுக்கும் இலகுவாக கூறிக் கொண்டன. ஆகவே ஏகப்பிரதிநிதிகள் என்ற விடயம் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. புலிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் முதற் கட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கருத் தொருமைப்பாட்டுக்கு வருவது மிகவும் முக்கியமானது. முதற் கட்டத்தில் ஒரு ஒற்றுமை முன்னணி ஏற்பட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. முதலில் தேவை கருத்தொருமைப்பாடேயாகும். இதன் அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற விடயத்துடன் தொடர்புபட்டிருக்கிறோம்.

அதேநேரம் மறந்து விடாமல் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களிடையே பலம் பொருந்திய மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து மற்றவர்கள் கூடுவதால் பலன் ஏற்படும் எனக் கூறமுடியாது. ஆகவே நாம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

யுத்தம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட போதிலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இன்று இம்மக்கள் எல்லா வகையிலும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். தமிழ் சமுதாயமே ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் சரியான முறையில் முன்னெடுப்புகளை எடுக்கமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் தீர்வுடன் சமாந்தரமாக பொருளாதார முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இன்றைய முக்கிய விடயமாகும். அரசியல் தீர்வு என்பது அதிகாரப்பரவலுடன் கூடிய ஒரு அரசாங்கம் என்பதாகும். நான் கூறுவது ஒரு மாகாண அரசாங்கம்.

இந்த 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல என்பதை நாம் மாத்திரம் அன்றி தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரேமதாஸ சர்வகட்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் 13 ஆவது திருத்தம் அறுதித் தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அதேபோல சந்திரிக்கா அம்மையார் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அமைத்திருந்தார். அத்துடன் தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்திருந்தார். பின்பு ரணில் விக்கிரமசிங்க கூட ஒஸ்லோ பிரகடனத்தின் ஊடாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இன்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த கூட சர்வகட்சிக் குழுவினை அமைத்து இருந்ததன் மூலம் 13ஆவது திருத்தம் தான் முழுமையான தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டது போல அன்றைய தலைவர்களின் செயற்பாடுகள் ஒஸ்லோ பிரகடனம் எல்லாம் உண்மை தான். ஆனால் இன்று அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சியோ சமஷ்டி என்ற சொல்லை பிரயோகிப்பதைக் கூட விரும்புவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: உண்மைதான். சமஷ்டி என்ற சொல் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கு கூட சொல்லத்தகாத ஒரு சொல்லாக அமைந்திருக்கிறது. இச் சொல்லை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள். எனவேதான் நாம் இச் சொல்லை பயன்படுத்துவதில்லை. பதம் அல்ல எமக்கு முக்கியம்.

எங்களுடைய பகுதிகளில் நாங்களே எங்களது பகுதிகளை அபிவிருத்தி செய்து நிர்வகிக்கக் கூடியதான மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாத சிறந்த ஒரு அதிகாரப் பரவலாக்கலையே நாம் பேசுகிறோம். கோருகிறோம். அது எந்த மாதிரியான (மொடல்) கூட இருக்கலாம். இந்தியா மாதிரியாகவோ சமஷ்டியாகவோ ஒற்றையாட்சியாகவோ ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பதாகவோ இருக்கலாம்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட பல விடயங்களை இப்போது எம்மால் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி: அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்று அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில்தான் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 13ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அத்துடன் உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் இரண்டு திருத்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவை எந்தளவுக்கு ஆரோக்கியமானது?

பதில்: 18ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது என்னைப் பொறுத்தவரையில் பிரச்சினைக்குரியவை அல்ல. ஆனாலும் பொலிஸ் சேவை ஆணைக்குழு முதலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கலை இதன் மூலம் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டிருப்பது எமக்கு பாதகமானதே. உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான திருத்தச் சட்டங்கள் சிறுபான்மை இனக் கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான். இக் கட்சிகளின் அங்கத்துவம் குறைந்து மிகப் பெரிய பிரச்சினைகளை இது தோற்றுவிக்கக் கூடியது. இக் கட்சிகளை படிப்படியாக இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்களாகவே இவற்றை நான் காண்கிறேன். இவற்றுக்கு மாகாண சபைகளில் ஐ.தே.கட்சி கூட ஆதரவு வழங்கியிருக்கிறது.

அரசாங்கத் தரப்பும் ஐ.தே.கட்சியும் இவ் விடயத்தில் ஒத்த நோக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிகிறது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சி எடுத்த நடவடிக்கைகள் பேசிய கருத்துக்கள் சிங்கள மக்களிடம் தங்களது தளத்தை இழக்கக் காரணமாகிவிட்டது என்று கருதுவதால்தான் என்னவோ இன்று இக் கட்சியினர்கூட கடும் போக்காளர்களாக மாறும் போக்கை காண்கிறேன். இந்த நிலை இலங்கையின் எதிர்காலத்துக்கு உகந்த ஒன்றாக இருக்க மாட்டாது.

இன்று தமிழ் மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு எல்லைக்குப் பிறகு வித்தியாசமான ஒரு நிலையை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய தலைமுறையில் என்னை எடுத்துக் கொண்டால் நாம் பேசித் தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இதை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கூட இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும் சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பதை அடுத்த தேர்தலுக்கு ஆன ஒரு விடயமாகவே பார்த்திருக்கின்றன.

எனவே இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசியலாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இப் பிரச்சினையை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வைக் கண்டுவிட வேண்டும். அதன்மூலம் நாட்டை சுபீட்சப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும். இதற்கு முன்வராத நிலையில் இப்போதைக்கு பலவீனமடைந்துள்ள தமிழ் மக்கள், தங்களை அடக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: வடக்கில் இந்தியாவும் தெற்கில் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் செயற்படுகின்ற புதிய நிலையில் இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கை தமிழர்களை எந்தளவுக்கு பாதிக்கின்றது?

பதில்: நாங்கள் சந்தித்த சந்திக்கக்கூடிய டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளும், தமிழ் நாட்டிலுள்ள சிலரும் இன்னும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நான் உணர்கிறேன். ஆனாலும் இந்தியாவுக்கு பிராந்திய அரசியல் குறித்தும் அதிக அக்கறை இருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடும் தமிழ்நாடு மூலமாக இந்திய மத்திய அரசாங்கம் தந்தை செல்வநாயகம் காலம் தொட்டு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைக் காணலாம் என முயன்று இருக்கின்றன. இந்தியாவின் பிராந்திய அரசியல் குறித்த செயற்பாடுகளை நோக்கும்போது சில சமயங்களில் எம்மை குறித்த அக்கறை அவர்களுக்கு குறைந்த மாதிரி தெரிந்தாலும் முழு அக்கறை இல்லை என்று கூற முடியாது. எனினும் 1983களில் இருந்த அக்கறை போல இன்று அக்கறை காட்டுவதில்லை என்பதை நிச்சயமாக கூறமுடியும்.

அக்கறை இல்லை என்று கூறாவிட்டாலும் குறைந்திருக்கிறது என்று நாம் கூறுவதில் எங்களுடைய பிழைகளும் அடங்கி இருக்கின்றன. அதாவது தமிழ் தரப்புகளுடைய பிழைகள் இந்தியாவின் அக்கறை குறைந்து போனதற்கு நிச்சயமான காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக இந்திய அமைதிப்படையை எடுத்து நோக்கினால் இந்தப் படையுடன் யுத்தம் ஆரம்பித்தவுடன் அப்படையை திரும்பிப் போ, இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்று குறை கூறினார்கள். பின்பு இலங்கை இராணுவம் வெல்லுகின்ற நிலை வந்தபோது இந்தியத் தாயே வந்து காப்பாற்று என்றார்கள்.

ஆகவே நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.

ஆகவே முழுமையாக இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை.

நாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா மூலம் சிறு அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

கேள்வி: யுத்தத்துக்கு பின்னரான தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு குறித்த வலியுறுத்தல்களில் விரும்பியோ விரும்பாமலோ அதிகம் பாதிக்கப்பட்டு விட்ட முஸ்லிம்களுக்கு எம்மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். அத்தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களுக்கு எத்தகைய இடம் அளிக்கப்பட வேண்டும் என்பன குறித்த நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: முஸ்லிம்கள் புலிகளால் மட்டுமன்றி சகல தமிழ் தரப்புகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களால் கிழக்கில் தமிழ் மக்களும்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவை குறித்து விவாதிப்பதில் இனி அர்த்தமில்லை.

எமது கட்சியில் மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை அன்றே எடுத்திருந்தோம்.

முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் அவர்களுடைய அபிலாஷைகள், அவர்களது பயங்கள் தீர்க்கப்படாமல் வட கிழக்குக்கு ஒரு தீர்வு வரமுடியாது. ஆகவே எந்த தீர்விலும் அவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களுக்கான என்ன தீர்வு என்பதை நாங்கள் கூற முடியாது. இதை முஸ்லிம்களே கூற வேண்டும். ஆரம்ப காலங்களில் மறைந்த நண்பர் அஷ்ரப் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். தென்கிழக்கு மாகாண அலகை அவர் கோரியபோது அதை நாம் மட்டுமன்றி அமிர்தலிங்கம் அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார். தமிழ் மக்களாகிய எங்களுக்கு என்ன தீர்வு என்பதை சிங்கள மக்கள் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லாதபோது முஸ்லிம்களுக்கான தீர்வை நாங்கள் கொடுக்க முடியாது.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பது உண்மையிலேயே ஒருவருக்கும் தெரியாது. புலிகள் செய்த இந்த மோசமான செயல் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன. இதை நாம் கண்டித்திருக்கிறோம். வவுனியாவில் நாம் பலமாக இருந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதான நிலையை ஏற்படுத்தி இருந்தோம். இவை எவ்வாறாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சரியான பாதையில் தமிழ் முஸ்லிம் இரு தரப்பும் இணைந்து பலமாக நின்றால்தான் வட கிழக்குக்கு ஒரு சரியான தீர்வை காணமுடியும். அது என்ன தீர்வு என்பதை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி: ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பின் போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சிக்கான சைகைகளை வெளிப்படுத்துவார் என சில தரப்பில் பேசப்படுகிறது? உங்கள் தரப்பால் இதனை எதிர்பார்க்க முடிகிறதா?

பதில்: அப்படி நான் எதிர்பார்க்கவில்லை. இன்று இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதியை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற ரீதியில் மிகப்பெரிய தலைவராக சிங்களவர்கள் பார்க்கிறார்கள். அவர் தீர்வு தொடர்பாக எதை சொன்னாலும் சிங்கள மக்கள் ஏற்கிறார்கள்.

ஜனாதிபதி இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு சரித்திர முக்கியத்துவமான கடமையாக நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியையும் அவரது தரப்பையும் நாம் ஆதரித்து இருக்கிறோம். அந்த வகையில் எமக்கு ஜனாதிபதியிடம் சில விடயங்களை கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இதனைப் பாரப்படுத்துவதால் நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனாலும் ஏனைய கட்சிகள் எப்படி ஜனாதிபதியை எதிர்பார்த்திருந்தாலும் என்னால் பெரிதாக எதனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

கேள்வி: இலங்கையில் தற்போதுள்ள நிலைமை குறித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? இம் மக்களை புலிகளுக்கு ஆதரவானவர்களாகவே பெரும்பான்மை இனம் பார்த்திருக்கிறது.

பதில்: இம்மக்கள் புலிகளுக்கு ஆதரவானவர்களாக பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அமைதியாய் இருக்கும் பெரும்பான்மை தமிழ் புலம்பெயர் மக்கள்கூட யுத்தம் இங்கு நடந்தபோது புலிகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைவரையும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகப் பார்ப்பது தவறு.

இவர்களில் பலருக்கு பல நோக்கங்கள் இருந்தன. மனப்பூர்வமாக புலிகளை ஆதரித்தவர்கள் உதவி செய்தவர்கள் ஒரு ரகம்.

அதேநேரம் தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டி பெருமையடைவதற்காக ஆதரித்தவர்கள் ஒரு ரகம். புலிகளுக்கு உதவி செய்வதன் மூலம் இலாபத்தை கண்டவர்கள் இன்னொரு ரகம்.

உண்மையில் புலிகளை ஆதரித்த பலர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். நிதி திரட்டுவதில் இவர்களுக்கு 20 சதவீத கழிவு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கணக்கு வழக்கின்றி நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கணக்கே இல்லாமல் போய் விட்டது.

இப்போது காசைப் பற்றி கேட்டால் தலைவர் வருவார் அவரிடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படியான நிலைகளையே நாம் இன்று காண்கிறோம். எனினும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையாக தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே கருதுகிறார்கள். இவர்கள் தான் அமைதியான பெரும்பான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்று சிறுகச் சிறுக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு இங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இங்கு வந்து செயற்படக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் இன்னும் உருவாகவில்லை. சிலர் இங்கு வந்து முதலீடு செய்தாலும் அவை வியாபார நோக்கம் கொண்டவை. அதேநேரம் பலர் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய சரியான மார்க்கம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களுக்கு சரியான மார்க்கம், ஊக்கம் நம்பிக்கையும் அளிக்கப்படும் பட்சத்தில் சிறந்த பெறுபேறுகளை அடையமுடியும்.

கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், குடியேற்றுதல், தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவித்தல் முதலானவற்றில் அரசாங்கம் கூறுவதுபோல செயற்பாட்டில் போதிய உண்மைத் தன்மை இல்லை என சில தமிழ் தரப்புகள் கூறுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: சுமார் 3 இலட்சம் மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட போது தமிழ் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் யாவும் இம்மக்கள் நீண்ட காலத்துக்குள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறின. நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோயிருந்தோம். ஜனாதிபதியை நான் சந்தித்தபோது நிச்சயமாக 6 மாதங்களுக்குள் இவர்களை விடுதலை செய்ய ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறியதுபோல இன்று செயற்படத் தொடங்கியிருக்கிறார்.

சில விடயங்களில் அரசாங்கம் நேர்மையாக செயற்படத் தொடங்கியிருக்கிறது. விடுதலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு என்பது மிகப்பெரியது. இதனை அரசாங்கம் மட்டும் தனித்து செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே ஏனைய நாடுகளையும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளையும் இப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்.

சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள மக்களிடம் மகிழ்ச்சி நிலவுகிற அதேநேரம் சிறுகச் சிறுக அச்சம் மேலோங்கி வருவதை நான் உணர்கிறேன். நிலப்பறிப்பு, பெரும்பான்மை சமூகத்துடனான வியாபாரப் போட்டி என்பன அதிகரிக்கின்றன.

இந்த வகையில் பெரும்பான்மையின மக்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியும் காணிகளை வழங்கியும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுப்பது தவறு. ஏனெனில் நலிவுற்ற தமிழ் மக்களால் இவர்களுடன் இப்போதே போட்டியிட முடியாது. எனவே இங்கிருக்கும் மக்களுக்கே தங்களை வளர்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இப்போது கைதானவர்கள் விடயத்தில் மாத்திரமன்றி பல காலங்களுக்கு முன்பே காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், சிங்களக் குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் குடியேறியிருப்பதன் பின்னணியில் சில சக்திகள் இருப்பதாக நினைக்கிறேன்.

இம்மக்கள் தாங்களாகவே இங்கு வந்திருக்க முடியாது. 1981ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 6 ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் மீண்டும் திரும்பி வருவதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் அதற்கான ஆதாரங்களையும் காணிகள் குறித்த விபரங்களையும் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.

இலங்கையில் யாரும் எங்கும் சென்று வாழலாம். ஆனால் அந்தப் பகுதியின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்ட குடியேற்றத்தைத்தான் நாம் முற்று ழுழுதாக எதிர்க்கின்றோம்.

கேள்வி: வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்க வேண்டும் என நீங்கள் கூறினாலும் யுத்த முடிவின் பின் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம் அவற்றை வெளியேறச் செய்திருக்கிறது அல்லவா?

பதில்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து நேர்மையாக ஒரு விடயத்தை கூற வேண்டும். யுத்த முடிவின் பின் வன்னி முழுவதையும் சென்று பார்த்தவன் நான். எத்தனையோ கோடி கோடி ரூபாக்கள் செலவு செய்திருப்பதாக தொண்டு நிறுவனங்கள் கணக்கு காட்டினாலும் குறிப்பிடத்தக்க எதையும் அங்கு காண முடியவில்லை. சுனாமியின் போதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செயற்பட்டன. மொத்தத்தில் எந்த அபிவிருத்தியையும் என்னால் இப் பிரதேசங்களில் காண முடியவில்லை. புலிகள் செய்ய விடவில்லை என்றால் அந்தப் பணங்களுக்கு என்ன நடந்தது? எனவே அரசின் நடத்தையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் குறை கூறிவிட முடியாது. சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அப் பகுதியில் இடமளிப்பதன் மூலம் இவற்றை சிறப்பாக செய்ய முடியும். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி இவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • sekaran
    sekaran

    திரு சித்தார்த்தன் அவர்களே,
    இலங்கையின் இனப்பிரச்னைக்கு இலங்கைக்குள் தான் தீர்வு காணவேண்டுமே தவிர இந்தியாவில் அல்ல என்கிற உங்கள் கருத்து அருமை. அதற்காக சிங்கள கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது. அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்தாலே அது நிரந்தர தீர்வை தரும் (grass root level). தூரதர்ச நோக்குடன் உங்கள் கோரிக்கைகளை ஏன் சாதாரண சிங்கள மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது? தென் இலங்கையில் ஏன் கலந்துரையாடல்கள், நட்புக் கழகங்கள் ஆரம்பிக்கக் கூடாது? வட இலங்கைத் தமிழர்கள் (தலைவர்கள் உள்பட) செய்த முக்கிய தவறு இது. வவுனியா தாண்டியதும் வீர வசனங்கள் பேசி அந்த மக்களை தவறான பாதையில் வழி நடத்திய முட்டாள்த்தனத்தை விட்டு ஆக்க பூர்வமான, நேர்மையான வழியை தேர்ந்தெடுத்திருந்தால், அன்று அவர்கள் துணிந்து கூட்டங்கள், கருத்துப் பரிமாறல்கள் செய்திருந்தால், சிங்கதத்தை அதன் குகையிலேயே சந்தித்திருந்தால், ஒருவேளை இன்று நிலைமையே வேறாயிருந்திருக்குமோ?…தென்னிலங்கையை சேர்ந்த என் போன்றவர்கள் அடிக்கடி யோசித்த விஷயம் இது. இன்று ஜனாதிபதியே தமிழில் பேசி (அவருக்கு ஓரளவு தமிழ் தெரியும்.) அசத்தும்போது அம்பாந்தோட்டையிலோ அல்லது அங்குரான்கெட்டையிலோ எங்கோ சரளமான சிங்களத்தில் பேசி ஏன் அவர்களை ஒரு கலக்கு கலக்கக்கூடாது? நம்முடைய நியாயத்தை ஏன் அவர்கள் மொழியிலேயே புரிய வைக்கக்கூடாது? நாமும் நல்லவர்கள் அல்ல. அவர்களும் கெட்டவர்கள் அல்ல.

    Reply
  • thurai
    thurai

    சேகரனின் கருத்து சித்தார்த்தன்னிற்கு மட்டுமல்ல, ஈழத்தமிழரின் நலன்களிற்காகப் பாடுபடும் அனைவரும் ஏற்கக்கூடியது.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரில் உள்ள > “தமிழீழ” தலையை வாலாக நினைத்து நறுக்கி விட்டு புளொட் வருமா? அடுத்த வருசம் வரும் கிரக மாற்றத்தோட புளொட் அப்படியாவது நிலைக்கும். இல்லாவிட்டால் வவுனியாவிலுள்ள உமாவின் நினைவு சின்னம் மட்டுமே மிஞ்சும். அதுவும்??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..இன்று ஜனாதிபதியே தமிழில் பேசி (அவருக்கு ஓரளவு தமிழ் தெரியும்.) அசத்தும்போது….//

    சிங்களத்தில் எழுதிவைத்து வாசிப்பதைக்கண்டு அசந்து போய்விட்டிர்களே? மஹிந்தாவுக்கு உங்களைப் போன்றவர்களை நன்கு விளங்கிக்கொள்ள முடிந்தது அவரின் வெற்றிதான்!

    //….அம்பாந்தோட்டையிலோ அல்லது அங்குரான்கெட்டையிலோ எங்கோ சரளமான சிங்களத்தில் பேசி ஏன் அவர்களை ஒரு கலக்கு கலக்கக்கூடாது?….//
    இவ்வாறே முன்னர் ஜீ.ஜீ பாலிமன்றில் கதைத்தார் சிங்களவன் வாயை பொத்திக்கொண்டு இருந்தான், வாயைப்பிளந்தான் என எங்கள் சனங்கள் வாசிகசாலையிலும் மடத்தடியில் இருந்தும் கதைத்து பூரிப்படைவார்கள். ஆனால் 1983 இல் தெரிந்தது நிலமை! இனுயும் அதே மாதிரி பூரிப்பு விளையாட்டுக்கு வழி சொல்கிறீர்களா?

    Reply
  • நந்தா
    நந்தா

    அது சரி. புளட் இயக்கத்தை நம்புவதற்குத் தமிழர்களுக்கு “ஏதாவது” இருக்கிறதா?

    சந்ததியார் காலத்தில் நடந்த சில ஊர்வலங்கள், உண்ணா விரதங்களில் மடுக்கந்தை, மயிலங்குளம் போன்ற ஊர்களில் வாழும் சில சிங்களவர்களைப் பங்கு கொள்ள வைக்க முடிந்தது. சித்தார்த்தன் அப்படி ஒன்றைச் செய்ய முடியாது.

    இப்பொழுது இந்தியாவை நம்பாதே என்பதைப் பார்க்கும் பொழுது லண்டன், அமெரிக்கா என்பவற்றைத் தவிர வேறு கதியில்லை என்று அவர் நம்புவதாகவே தெரிகிறது. போகிற போக்கைப் பார்த்தால் உருத்திர குமாரனுடன் கூட்டணி வைத்தாலும் வைத்து விடுவார் என்று நம்புவதற்கு இடமுண்டு!

    Reply
  • மாயா
    மாயா

    //சிங்களத்தில் எழுதிவைத்து வாசிப்பதைக்கண்டு அசந்து போய்விட்டிர்களே? மஹிந்தாவுக்கு உங்களைப் போன்றவர்களை நன்கு விளங்கிக்கொள்ள முடிந்தது அவரின் வெற்றிதான்! – சாந்தன் //

    சாந்தன் மாவீரர் உரையையெல்லாம் தலைவர் பேப்பர் படிக்காமல்தானே பேசினார்.
    -http://www.youtube.com/watch?v=wCJDJj5ljm0

    மகிந்த யாழ்பாணத்தில் பேசியது:
    -http://www.youtube.com/watch?v=vfsDui7mNNo&feature=related

    Reply
  • மாயா
    மாயா

    // புளட் இயக்கத்தை நம்புவதற்குத் தமிழர்களுக்கு “ஏதாவது” இருக்கிறதா? – நந்தா//

    இல்லாமலில்லை. ஆனால் தலைமையில் மாற்றம் வேண்டும். சித்தர் > அரசியல் பேச வல்லவர். ஆனால் தோழர்களை வழி நடத்தும் பலம் அவரிடமில்லை. இது பலம் மற்றும் பலவீனம். சித்தர் தாமாகவே முன் வந்து நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர நினைக்க வேண்டும். சர்வதேச தலைமையும் மேடை – வானோலி பேச்சுக்கு வல்லமை கொண்டவர்களே தவிர > தோழர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பலமில்லாதவர்கள். இதில் மாற்றம் இல்லாத விடத்தில் திரும்பவும் பேசிப் பேசியே காலத்தை கரைத்து விடுவார்கள்.

    இன்று தமிழ் அமைப்புகள் அல்லது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தது தொண்டமான் செய்தது மாதிரியாவது நடந்து கொள்ள வேண்டும். ஒன்று மதிலுக்கு இந்தப் பக்கம் அல்லது மதிலுக்கு அந்தப் பக்கம் நிறக் வேண்டும். மதில் மேல் நின்று மியாவ் மியாவ் என்பது படு முட்டாள்தனம். கடந்த தேர்தலில் புளொட் அரசோடு இணைந்து போட்டியிட்டிருந்தால் > நிச்சயம் ஒரு சீட்டாவது வந்திருக்கும். கிடைக்காமல் போனாலும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்யும் நிலைமையாவது வந்திருக்கும். கருணா என்ன தேர்தலில் நின்றா அமைச்சர் ஆனார்?

    நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைத்தான் பார்ப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் நல்லது செய்யும் போது > உங்களை தேவைப்படும். மக்கள் தானாகவே மாறுவார்கள். இவை இயல்பு.

    //இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை. நாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா மூலம் சிறு அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.- சித்தார்த்தன் //

    //நாங்கள் சந்தித்த சந்திக்கக்கூடிய டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளும்இ தமிழ் நாட்டிலுள்ள சிலரும் இன்னும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நான் உணர்கிறேன் – சித்தார்த்தன் //

    //சுமார் 3 இலட்சம் மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட போது தமிழ் கட்சிகள்இ எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் யாவும் இம்மக்கள் நீண்ட காலத்துக்குள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறின. நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோயிருந்தோம். ஜனாதிபதியை நான் சந்தித்தபோது நிச்சயமாக 6 மாதங்களுக்குள் இவர்களை விடுதலை செய்ய ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறியதுபோல இன்று செயற்படத் தொடங்கியிருக்கிறார். – சித்தார்த்தன் //

    மேலே சித்தார்த்தன் சொல்லும் விடயங்களில் முரண்பாடுகள் தெரிகின்றன. சரியாக எதையும் கணிப்பிட முடியாதை உணர முடிகிறது. “இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை. நாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும்.” இதுவே பிரச்சனை. ஏகப்பட்ட கட்சிகளும் > தலைவர்களும் ஆளாளுக்கு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வராமல் ஈகோ தனமாக செயல்படுவது நன்கு புரிகிறது. எல்லோரும் என்னால்தான் இது கிடைத்தது. நடந்தது என தன்மானச் சிங்கங்களாக பொன் எழுத்துகளால் தமது பெயரை பொறிக்க விரும்புகிறார்களே தவிர> மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஒன்றாக ஒன்றைச் சொல்ல எவரும் முன்வரவில்லை.

    தமிழருக்கான பிரச்சனையை தீர்க் வேண்டும் என்பது சிங்களவனுக்கு தெரிந்தாலும்> யார் சொல்வதை நடைமுறைப்படுத்துவது என அவனையே குழப்பி விட்டார்கள். இது தீர்வு தாமதமாவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. கட்சிக்கு பலம் சேர்க்க புலத்துக்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளில் > எத்தனைபேர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணி செய்கிறார்கள் என்று பாருங்கள்? அவர்களது முகங்கள் தெரியும். எதிர்காலத்தில் பலர் இல்லாமே போய் விடுவார்கள். வாக்களிப்பது புலத்து மக்களலல்ல > அந்த மக்கள். அதை ஓரிருவரைத் தவிர ஏனையோர் மறந்தே விட்டனர்.

    புலிகள் செய்த அதே தவறை> இன்றைய தமிழ் கட்சிகளும் தொடர்வது தெரிவதால் > ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என சொல்வதில் தப்பே இல்லை.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழ் கட்சிகளுக்கு ‘தமிழ் பிரச்சனை” தீர்ந்துவிட்டால் பின்னர் வேலை வேலை இல்லாது போய் விடும் என்ற பயம் இருக்கிறது.

    நம்மநாட்டில் அனெம்ப்லொய்மென்ட் பெனிபிட் கிடையாது. எனவே சித்தார்த்தனும் “தீர்க்கபடாத” பிரச்சனையாக தமிழர் பிரச்சனை இருக்க வேண்டும் என்று சம்பந்தர்களைப் போல எண்ணத் தொடங்கியிருக்கிறார்!

    Reply
  • Mohamed Shareef Asees
    Mohamed Shareef Asees

    Mr, Sitharthan
    It seems that the bottom line of your argument is about the self determination in the North and Eastern Provinces of Sri Lanka. Remember, you commit the same mistake what the LTTE and TNA did in the past.

    Reply