தமிழ் இனத்தின் விடுதலை என்ற பெயரில் கடந்த 60 வருடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இழுத்து விடப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தியிருக்கின்றார்கள். எனினும் ஜனநாயக வழி ஆயுத வழியென இரண்டு வழிகளில் நடந்த போராட்டங்களால் இன்றுவரை எதனையும் சாதிக்க முடியவில்லையென அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நல்லூர் பிரேதச செயலகத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இனத்தின் விடுதலைக்காக 30 வருடம் ஜனநாயக வழியிலான போராட்டமும் அதன் பின்னர் 30 வருடங்கள் ஆயுத வழியிலான போராட்டமும் நடந்து முடிவுற்றுள்ளது.இந்த இரண்டிலுமே தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஜனநாயக வழயிலான போராட்டத்தின் முகம் சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் ஆயுதங்களை ஏந்தினோம்.ஆனால் பின்னர் ஆயுத வழியிலான போராட்டமும் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே நின்றமையினால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற முடியவில்லை.ஆகவே இரண்டு வழியிலான அனுபவங்களையும் நாங்கள் கொண்டிருக்கின்றோம்.அதனடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வழியை தேர்ந்தெடுக்கப் போகின்றோம்.சில விடயங்களை எதிர்க்கத்தான் வேண்டும் அதேவேளை தேவையானவற்றை பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வளாகம் வேண்டாம் பல்கலைக்கழகம் தான் வேண்டும் என வளாகம் அமைக்கப்பட்ட போது எதிர்த்தார்கள்.அதையும் மீறி வளாகம் அமைக்கப்பட்டு இன்றைக்கு அது பல்கலைக்கழகமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் இந்த முடிவைத்தான் அடையும் என நாங்கள் அன்றைக்கே கூறியிருந்தோம்.ஆனால் நாங்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டோமே தவிர வேறெதுவும் நடக்கவில்லை.
அதேபோல இன்றுள்ள பாதையும் எங்கு போய்முடியும் என்பது எனக்குத் தெரியும்.பகவத் கீதையை நினைத்துப் பாருங்கள் எல்லாம் நன்றாக நடந்தது எல்லாம் நன்றாகவே நடக்கவிருக்கிறது.இருப்பதையாவது காப்பாற்றிக் கொண்டு தேவையானவற்றை பெற்றுக் கொண்டும் உபாயத்தை தேடுவோம்.நாளைக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கம் நீங்கிய வாழ்க்கை ஜனாதிபதியால் பெற்றுத் தரப்பட்டுள்ளது.அதை பயன்படுத்துவோம் என்றார்.இந்நிகழ்வில் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்,பாராளுமன்ற உறுப்பினர் அலென்டின், மாநகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் இதன் போது ஊருணி என்ற நூலும் வெளியிடப்பட்டது.