சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.
அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.