16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.
15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.
ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.