நேற்று நவம்பர் 14ம் திகதி ரெலோ உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் ஒன்றுகூடி தமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தையம் செயற்பாட்டுக் குழுவையும் லண்டனில் ஆரம்பித்துக் கொண்டனர்.
லண்டன் கரோவில் உள்ள லேபர் கட்சியின் அலுவலகத்தில் மெளன அஞ்சலியுடன் ஒன்று கூடிய ரெலோ உறுப்பினர்கள், கடந்த காலங்களில் ரெலோவின் நிலைப்பாடுகள், சிறிரெலோவின் நிலைப்பாடுகள், சிறிகாந்தா, ஜிவாஜிலிங்கம் போன்றோரது நிலைப்பாடுகள் பற்றியும், இவர்களிடையே ஒற்றுமைபாடுகளை உருவாக்குவது பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், இந்த விடயங்கள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று முடிவானது.
லண்டனிலும் மற்றைய ஜரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது என்றும் இதர அமைப்புகளுடன் ஒன்றிணைந்த அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராடுவது என்றும் உடன்பட்டனர். தமது இயக்கத்தின் செயற்பாடுகளை ஜரோப்பிய நாடுகளில் விஸ்தரிப்பது பற்றியும் ஆராய்ந்தனர். புலிகளாலும், இராணுவத்தினராலும், ரெலோவினாலும் பாதிக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் பற்றியும் இவர்களுக்கான உதவிகள் செயல்வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்து, இவைபற்றி மேலும் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுப்பது என்றும் முடிவானது.
ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரான திரு சுதன், ”ரெலோ என்ற அடையாளத்தைவிட தமிழ் மக்களின் இன்றைய தேவைகள், அம்மக்களின் இலட்சியம், நல்வாழ்வு இவையே உயர்த்தப்பட வேண்டுமே தவிர, ரெலோவின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை அல்ல” என்றார். ”ரெலோவிற்காக அல்ல மக்களுக்காக செயற்படல் வேண்டும்” என்றும் சுதன் சுட்டிக்காட்டினார். திரு சுதன் அவர்கள் ரெலோ அமைப்பு ஈஎன்எல்எப் உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்ததை குறிப்பிட்டு, ”இவ்வாறான கூட்டிணைவுச் செயற்பாட்டுக்கு ரெலோ என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இயங்க ரெலோ தயாராக இருப்பதையும், இதற்கான பல தொடர்புகள் உருவாகியிருப்பது பற்றியும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
கூட்ட முடிவில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜனா தலைமையில் ஏழு பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. விரைவில் ரெலொவின் முழுமையான தொடர்பு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.