வன்னி யில் யுத்த சூனிய வலயம் என்று எந்தவொரு இடமும் இருந்திருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தயா மாஸ்டர், மோதல் வன்னியில் உக்கிரமடைந்திருந்தபோது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்பது குறித்துக் கருத்துக் கூற முடியாதெனவும் தெரிவித்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே முன்னாள் விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை பேச்சாளரான தயா மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆணைக்குழு முன் தயாமாஸ்டர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை ஊடகப்பிரிவிற்குப் பொறுப்பாளராக நான் கடமையாற்றியுள்ளேன். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த நிலையில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற முயற்சித்துள்ளேன். சமாதான உடன்படிக்கையின் முறிவும் புறக்கணிப்பும் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தமை போன்றவற்றாலேயே நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன். போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நிலையில் பல பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையில் மக்கள் சிக்கியிருந்தனர். இவ்வாறிருந்த மக்களைப் போலவே நானும் எனது குடும்பமும் மரணத்தின் விளிம்புவரை சென்றிருந்தோம்.குறித்த சில பகுதிகளில் தான் போர் நடைபெற்றன. வரையறுத்துக் கூற முடியாது. போரின் பரிமாணங்கள் பரந்தவையாக இருந்தன.என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர்.நாளுக்கு நாள் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், பொருத்தமான முறையில் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையையே ஒவ்வொருவரும் தேடிச் சென்றனர் என்பதுதான் உண்மை.
அன்றைய காலகட்டத்தை என்னால் மறக்க முடியாது. யுத்தத்தால் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக நானும் வருந்துகின்றேன். இந்த உயிரிழப்புகள் தேவையற்றவை. யுத்தம் தீவிரமடைந்தபோது சமாதானத்தை விரும்பிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர்கள் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலகுமாரன் ஊடாக தலைவர் வே.பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். ஆனால், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலைக்கு அடைந்துவிட்டது. இவ்வாறான நிலையில், உயிரிழப்புகளும் கட்டுமான சேதங்களும் அதிகரித்த நிலையில் அரசுடன் இணைவதால் சமாதானமாக வாழலாம் என எண்ணிய பலரில் நானும் ஒருவன்.
இந்நிலையில்தான் 2009 ஏப்ரல் 28 ஆம் திகதி நானும் ஜோர்ஜ் மாஸ்டரும் சரணடைந்தோம். மக்களுடன் மக்களாக நாமும் இராணுவத்திடம் சரணடையும்போது எம்மை மக்களிடமிருந்து வேறாக்கிய இராணுவத்தினர் எம்மை நன்றாகவே நடத்தினர். ஆனால், சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்று கருத்துக்கூற முடியாது. தற்போது நான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன். மோதலின் போது அதிக இரத்தம் உயிர் சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மாரின் உறவினர்களின் தகவல் அறியாமல் உள்ளனர். அங்கலாய்ப்பும் போரின் வடுக்களும்தான் இன்று மிச்சமாய் இருக்கின்றன. பரஸ்பரம், நம்பிக்கை இன்மையும் மற்றவர்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொள்ளாமையுமே இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.
இந்த சமாதானச்சூழல் சாத்தியமற்றுப்போனது. நீண்டதும் அதிக இழப்புமிக்கதுமான போர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பல முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.முன்னாள் போராளிகள் தொடர்பாக சமூகத்தில் ஒரு தவறான கண்ணோட்டம் இருந்து வருகின்றது. வேலைவாய்ப்பு வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ புலிகள் இயக்கத்தில் இணைந்தும் ஆதரவு வழங்கியும் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், யுத்த காலத்திலும் யுத்தத்தின் முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அதிக அக்கறை காட்ட வேண்டும்.இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்து வரும் வன்னி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். மீள்கட்டுமானங்களை இழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.
போர் நடைபெற்ற பிரதேசங்களில் இயல்பு நிலையை மீட்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். இவற்றின் அடிப்படையில் நீண்டகால நிலையான சமாதானத்துக்கான பரிந்துரையை ஆணைக்குழு இறுதி அறிக்கையில் வலியுறுத்த வேண்டும். 1987,1990,1995,2000 ஆகிய ஆண்டுகளில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். முன்னர் நடைபெற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களிடம் தவறான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது மீண்டும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தயாமாஸ்டர்;
1972 தொடக்கம் இறுதிக்கட்டப் போர் (2009 மே) வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பதிவு உண்டு. புதுமாத்தளன், பொக்கணை ஆகிய இரு சிறு இடங்களுக்குள் பெருமளவான மக்கள் அடங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் புலிகளும் அங்கிருந்து தாக்குதல் மேற்கொண்டனர். இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால், புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதித்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன், மோதல் தவிர்ப்பு பகுதி என்று எந்தவொரு இடமும் வன்னியில் அமுலில் இருக்கவில்லை. அத்துடன், இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்தினை யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் மதிக்கவில்லை.
போர் நிறைவடைந்து முன்னாள் புலிகள்,ஆதரவு வழங்கியோர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். போராட்டம் உருவாவதற்கு அரசியல் பிரச்சினையே காரணமாக இருந்தது. அத்துடன், வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தனிநாட்டுக் கோரிக்கையை தந்தை செல்வா தரப்பினர் தொடராத நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக வே.பிரபாகரன் என்னிடம் பல தடவை கூறினார். அத்துடன், அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சமாதான முறையில் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தினக்குரல் 15.11.2010
மாயா
//யுத்தம் தீவிரமடைந்தபோது சமாதானத்தை விரும்பிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர்கள் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலகுமாரன் ஊடாக தலைவர் வே.பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். ஆனால், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலைக்கு அடைந்துவிட்டது..//
பாலகுமாரர் ; பிரபாகரனின் ” அடைந்தால் தமிழீழம் ; அடையாவிட்டால் மரண ஓலம்” எனும் எண்ணத்தை ஆதரித்துள்ளார் என சொல்கிறீர்கள்.
இதே போன்ற ஒரு கருத்தை கருணாவும் சொன்னதாக நினைவு. தாய்லாந்தில் பேச்சு வார்த்தை முடிந்து வந்த கருணா , இனி போர் செய்வது ஆபத்தானது. பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சொன்ன போது ; என்ன செய்யலாம் என பிரபாகரன் பாலகுமாரிடம் , “படித்த மனிதர் என்ன சொல்கிறார்?” என பிரபாகரன் பாலகுமாரிடம் கேட்க ” தலைவர் என்ன நினைக்கிறார்” என திருப்பிக் கேட்டாராம்.
தலைவர் தமிழீழம் கிடைக்கும் வரை போராட வேணும் என்கிறார் எனச் சொன்னதும்; தலைவர் சொல்வதுதான் சரியென பாலகுமார் சொல்ல அனைவரும் தலையை சொறிந்தனராம். பிரபாகரனே ஒருபடியாக இறங்கி வந்து ஒத்துக் கொள்ளும் மன நிலையில் இருந்த போது அதை இல்லாமல் பண்ணியது படித்த மனுசன் பாலக்குமாராம். எனவே பாலக்குமாருக்கு சங்கு ஊதியிருப்பார்கள் என்பது உறுதியாகிறது.