ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.
இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.
முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.