தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தாம் நிதிமோசடியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். தான் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்படுமானால் தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக விளக்கினார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது-
“விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலனின் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து எழிலனை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதன் பின்னர் மேஜர் மதியழகன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு எழிலன் உயிருடன் இருப்பதாகவும், நான் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு எழுதிய கடிதம் தன்னிடமிருப்பதாகவும், எழிலனின் விடுதலை குறித்து அவரது மனைவியிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவரே எழிலனின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். பின்னர் அவர் எழிலனின் மனைவியுடன் கதைத்து அவரை விடுவிக்கப் பணம் கோரியதாக அறிந்தேன். இதே போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ந.நிதர்சன், சுதாமாஸ்ரர், ஆகியோரின் உறவினர்களுக்கும் நடந்ததாக அறிந்தேன். இந்த விடயங்களை இரணுவத் தளபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். புலி உறுப்பினர்களை விடுவிப்பதாகக் கூறி அவர்களின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நான் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்”
-இவ்வாறு அவர் தெரவித்தார்.