விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது அவர்களைக் கொலை செய்ததான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று செவ்வாய் கிழமை இரண்டாவது தடவையாக குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். போரின் போது 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியவரும் தற்போது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுவருமான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளராகவிருந்த புலித்தேவன், அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசன், புலிகளின் தளபதிகளில் ஒருவராகவிருந்த ரமேஸ் ஆகியோர் யுத்தத்தின்போதே கொல்லப்பட்டனர் என சவேந்திரசில்வா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வாரவெல, சர்பிக் ரஸீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சவேந்திர சில்வா பதிலளித்தார்.
குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்திருந்தால் அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம் எனவும், ஆனால், அவர்கள் சரணடைய விரும்பவில்லை எனவும், யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்தார்.
இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட பல குறுக்குக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.