யாழ்ப் பாணத்தில் ஜே.வி.பியினரை பொதுமக்கள் தாக்கினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி தவறானது என்றும், தங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப்பிரிவினரே செயற்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜே.வி.பியின் நடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யாழ்நகரில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த பொலிஸார் எங்களை உடனடியாக குடாநாட்டை விட்டு வெளியுறுமாறும், தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர் யாழ். நகரிலும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் தங்களுடன் நல்லுணர்வுடன் நடந்து கொண்டனர். வைத்தியசாலை வைத்தியர்கள். தாதியர் முதலானோர் தங்களுடன் பண்பாக நடந்து கொண்டதோடு தங்களை சிரத்தையோடு கவனித்தனர் எனவும் அவர் கூறினார்.
வடக்கு கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடைபெறுகின்றது. கோத்தாபய ராஜபக்ச அங்கு பிரபாகரனாக செயற்படுகின்றார் எனவும், புலனாய்வப் பிரிவினா சிந்திப்பதையும் நினைப்பதையும் பொதுமக்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார்.
அச் செய்தியாளர் மாநாட்டில் அவர் தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் காண்பித்தார்.