யாழ்.குடாநாட்டில் சிங்கள மக்கள் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள அமைப்பு ஒன்று செயற்படுவதாகவும், தற்போது எற்பட்டுள்ள சுமுகநிலையை குழப்பி இனமோதல்களை தோற்றுவிக்க அந்த அமைப்பு யாழ்.குடாநாட்டில் சிங்களக் குடியேற்றங்களை நெறிப்படுத்தி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். வந்து குடியமர்ந்துள்ள சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் எவையும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படுவது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து மீள்குடியேறுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், அவர்களுக்கு சொந்தமாக காணிகள், வீடுகள் இங்கு உள்ளன. ஆனால், வியாபார நோக்கத்திற்காக முன்னர் இங்கிருந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வீடுகள் இல்லை. அவர்களை அரசாங்க காணிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதமானதாகும். தற்போது நிலவுகின்ற சுமுகமான சூழ்நிலையை குழப்புவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.