யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்பத்தாறு மணித்தியாலத்துக்குள் கடும் மழை பெய்யுமென யாழ். திருநெல்வேலி வானிலை ஆய்வுமையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது தாழமுக்கம் இல்லாதபோதும் இது பருவப் பெயர்ச்சிக்கான மழை வீழ்ச்சியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று காலை முதல் குடாநாட்டிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் தொடச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
குடாநாட்டில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. யாழ்ப்பாணம் மொம்மைவெளி, சூரியவெளி பண்ணை, காக்கைதீவு, இருபாலை மக்கள் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெள்ளகாரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவணிக்க தகவல்களை திரட்டி வருகின்றது.
மன்னாரில் தொடரும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. மன்னார் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களில் நீர் நிறைந்து பெருக்கெடுத்திருக்கின்றது.
Visva
கடும் மழை காரணமாக நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒன்பது மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாடு முழுவதும் பெய்த வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக பாரிய கற்கள் சரிந்து விழுந்ததால் ஆறு குடும்பங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் வெள்ளிப்பெருக்கினால் பொதுமக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.