தயவு செய்து கேவலப்படுத்தாதீர்கள்! சூதாட்டத்தை நிறுத்துங்கள்!! மக்களை ஏமாற்றும் இழி செயலை நிறுத்துங்கள்!!! : மாவீரர் தின உரை நாடகத்தை முன்னிட்டு : ஆதவன்
முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)
மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு –மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா!
சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.
ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.
இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இ;ல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது.
இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான். விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொருத்தவரையில் மாவீரர் தின உரையாற்றும் தகுதி அதன் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதுவே புலிகளின் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது. சிலரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடானது, புலிகளின் மரபையும், அந்த மரபைக் காத்து உயிர்நீத்த ஆயிரக் கணக்கான போராளிகளின், உடன் இருந்த மக்களின் தியாகங்களை நகைச்சுவைக்குரியதாக மாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை. தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் பகிரங்கப்படுத்திய கே.பியை துரோகி என்றவர்கள் எந்த அடிப்படையில் ; இந்தச் செயலை அனுமதிக்கின்றனர்? அவ்வாறு ; உரையை ஏற்பதாயின் முதலில் கே.பியின் கூற்றை அங்கரித்துவிட்டல்லவா அதனை ஆமோதிக்க வேண்டும். சிலர் சொல்லுவது போன்றே தலைவர் இருக்கிறார், அவர் தக்க தருணத்தில் வருவார் என்றால் எவ்வாறு .,?????? தலைவர் பிரபாகரனின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்? இப்படியான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றவர்கள் யார்?
ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.
புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன.
அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை ‘மேதகு’ அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னர் தலைவர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. மேதகு சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.
உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.
எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.
நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – ‘எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை’ – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.
இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள் – பட்டினியில் மயங்கும் முதியோருக்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.
வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது?
Related Link:
http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)
அமலன்
நான் ஈழத்தில் இருந்து எழுதுகிறேன். இது பற்றி புலத்தில் உள்ளவர்கள் அதிகம் பேசுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் உங்கள் மனச்சாட்சி உறுத்துகிறதா? இதற்கு பதில் சொல்லும் திரானி உங்களுக்கு இல்லையா? ஏன் மௌனம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு வன்னியில் வாகரையில் படுவான் கரையில் இருக்கும் ஏழைகளின் பிள்ளைகளை வைத்து பிழைக்கப் போகின்றீர்கள். இன்று கொள்க பேசினோர் எல்லாம் வாழ்வுக்காக அலைகின்றனர். ஒருவேளை உணவாவது வயிறாற சாப்பிடா முடியாதா என்று ஏங்குகின்றனர். ஆனால் கூலிக்கு வந்தவர்கள் எல்லாம் குதுகலமாக தங்கள் குடும்ப சகிதம் வாழ்கின்றனர். எங்கள் நெஞ்சி பொறுக்குதில்லை இந்த கேவலம்கெட்ட புலத்து புலி விசுவாசிகளை எண்ணி. இவர்கள் உண்மையிலேயே புலிகளின் விசுவாசிகளாக இருந்தால் இவர்களுக்கு தலை வணங்கலாம் ஆனால் இவர்கள் போட்தெல்லாம் தேசிய வேசமல்லவா. முள்ளி வாய்க்கால் வரைக்கும்தான் இவர்களுக்கு முகமூடி தேவைப்பட்டது. இப்போது தங்கள் உண்மை முகம் காட்டுகின்றனர். மனச்சாடசியுள்ள புலத்து தமிழன் எவனாவது இருப்பின் இவ்வாறான எழுத்துக்களை பகிரங்க விவாதத்திற்கு எடுக்கட்டும் பார்ப்போம் அப்படி யாராவது இருந்தால். சும்மா தேசியம் என்று விரட்டி வியாபாரம் செய்யாதீர்கள் கொஞ்சசமாவது உண்மையாக இருங்கப் பாருங்கள். வருடத்தில் ஒரு சில நாட்களாவது உங்கள் மனச்சாட்சிக்கு சிறிதாவது வேலை கொடுங்கள். அதனை எங்காவது அடகு வைத்திருந்தால் அதனை சில நாட்களுக்காவது மீட்டெடுங்கள். இப்படியும் ஒரு பிளைப்பு பிழைக்க வேண்டுமா? நீங்கள் எல்லாம் என்ன ஜென்மங்கள்?
மாயா
ஆதவன் ; அமலன் போன்றவர்கள் புலத்தில் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்? அதை மறக்க வேண்டாம்.
குதிரைகள் களைத்து உயிரை விட்டு ஓடும். ஆனால் வெற்றிக் கிண்ணம் குதிரையை ஓட்டும் ஜாக்கிக்குத்தான். வெளியே குழுமியிருப்பவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்துவார்கள். எல்லாம் பொழுது போக்கு. அதில் பலர் பணத்தை வைத்து பந்தயம் கட்டி பணக்காரராவார்கள். அவர்களுக்கு குதிரைகளின் வேதனை தெரியாது. ஓடுற குதிரைதான் எங்களுக்கு வேணும் என்ற தோரணையில் கதைக்கும் புலத்து புலிகளிடம் / புலத்து தமிழரிடம் ; உங்கள் கதைகள் எடுபடாது. அவர்கள் நடத்துவது வியாபாரம் . அதோடு புகழ். அவர்களது புகழுக்காக சாவதும் தேய்வதும் நீங்கள்தான்.
இனியாவது உண்மைகளை உணர்ந்து ; நீங்களாவது திருந்தப் பாருங்கள். உங்களுக்கு எம்மால் வேறு அட்வைசெல்லாம் சொல்ல முடியாது.
thurai
தமிழீழமென 30 வருடமாக விளம்பரத்தோடு பிழைப்பு நடதியவர்கள் ஓய்வார்களா?
உலகின் எத்தனை குட்டி முதலாளி முதல் கோடீஸ்வரர்களை புலிகள் உருவாக்கியுள்ளனர். இலங்கையில் இராசபக்ச அரசினால் தமிழரின் உருமைகள்
கொடுக்கப்பட முடியாவிட்டாலும் தமிழரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இப்போ இலங்கையில் இறந்தவரிற்கு புலம் பெயர்நாடுகளில் சமாதி கட்ட பணம் சேர்க்கின்றார்கள். தமிழீழத்திற்கென வாங்கிய பணமெங்கே
தமிழீழமெங்கே? புலம்பெயர் நாடுகளில் வாழ்வோரே சமாதியானால் அந்த சமாதியை பராமரிக்க முடியாது. அதற்கும் பின்பு ஓர் பண வசூல். மாவீரர் தினம் கிறிஸ்தவ, இந்து கோவில்களின் உற்சவம் போல் ஆகிவிட்டது.– துரை
நந்தா
புலம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் ஈழம் என்ற கோட்பாட்டுக்கு ஆதரவு என்பது வெறும் பம்மாத்து. ஈழம் என்பதற்கு ஆதரவு என்றால் இவ்வளவு பேர் இலங்கயை விட்டு ஓட்டம் பிடித்திருக்கத் தேவையில்லை.
வந்த இடத்தில் “முதல்” போடாத வியாபாரமாக “மாவீரர்” வியாபாரம் நடந்து பலர் பல லட்சங்களுக்கு உரிமை பெற்று விட்டனர்.
அவர்களின் அந்த “லாபகரமான” தொழிலை விடக் கோரினால் அவர்கள் விடுவார்களா?
விளங்காமுடி
ஆதவன், அமலன்!
உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் இந்தக் கோபத்தினால் எதையும் சாதிக்க முடியாது. வல்லான் வகுத்ததே வாய்க்கால். வெளிநாட்டுக்காரரை நம்பிய போராட்டமும், வாழ்வும் துன்பியலானது. எனவே இருக்கும் இடத்தில் எப்படி எழுந்து நிற்பது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
Jeyarajah
ஆதவன், அமலன் நீங்கள் கேட்டவாறு ஏன் எல்லோரும் மெளனம் என்பதல்ல இது போன்ற கருத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தாகிவிட்டது. இன்றைய புலம்பெயர் புலிகள் உங்களை, இவர்கள் இங்கிருந்து புருடா விடுகிறாங்கள் என்றும் சொல்வாங்கள். மாவீரர்தினம் என்றால் அது புனிதமானது. அதைப்பற்றி யாரும் மூச்சுவிடக் கூடாது என்றும் கூறுவார்கள். இரண்டுநிமிட அகவணக்கத்தோடு பிறகு புதிதாக வாங்கிய பட்டுச்சாறியும் பிள்ளைகளின் நாட்டியமும் நடக்கும். இதில் தேசிய உடையில் காவலர்கள் வேறு. போராட்டத்தில் இறந்தவர்களை தவறவிட்டதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. முதலில் எல்லோரையும் அடக்க வேண்டும். தாயகத்தில் குருஷேவ் எழுதிய குஞ்சப்பூவும் ராசையா அண்ணையும்தான் ஞாபகம் வருகிறார்கள்.
மகுடி
போன முறை மாவீரர் தினத்தில் ஓடிந்திரிந்த ஜெர்மனி பிரேமன் பகுதியில் காசு சேர்த்த பொறுப்பாளர் கிருபா; இந்த முறை மாவீரர் தினத்துக்கு யூகேயில பெரிசா வீடு வாங்கி ; கடை திறந்திட்டார் என்று காசு குடுத்த நண்பர் சொன்ன போது ; நீங்க அவரை வாழ வழி காட்டியிருக்கிறீங்க என்றேன். மரணத்தின் மீது எழுவோம் என்பது இதைத்தானோ?
அமலன்
இதனை நாங்களும், அக்கறையும் உண்மையான மக்கள் நலன்சார் ஈடுபாடும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எவ்வாறு தடுப்பது. இது போன்றவர்களை தொடர்ந்தும் அனுமதித்தால் அவர்களின் ஆட்டம் ஓயப் போவதில்லை. இதனை அக்கறையுள்ள நீங்கள்தான் அங்கு செய்ய வேண்டும். ஈழத்தில் இருக்கும் எவரும் அங்கிருந்து புரட்சி பேசுவோரை கருத்தில் எடுக்கும் நிலையில் இல்லை. அவர்களது ஆட்டம் எல்லாம் அங்கு மட்டும்தான். அங்குதான் அவர்களை நீங்கள் மட்டுப்படுத்த வேண்டும். இவர்களது போலித்தனங்களை ஆதாரங்களுடன் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். இதனை நீங்கள் செய்ய முன்வர வேண்டும். இங்கு பிரச்சனை தீய செய்லகளில் ஈடுபடுவோர் அல்ல, அந்தத் தீய செயலை அனுமதித்துக் கொண்டு இருக்கின்றனரே நல்லவர்கள் என்போர் அவர்கள்தான் நமது கோபத்துக்குரியவர்கள்.
மாயா
அமலன் ; இவர்களுக்கு எதிரான கோசங்களையாவது நீங்கள்தான் கொண்டு வர வேண்டும். புலத்தில் ஆளுக்கு ஆள் ; தாயக மக்களைக் காட்டித்தான் உழைக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் தமிழீழம் கிடைக்கும் எனற் நம்பிக்கையில் போராடியிருக்கலாம். அதை நாங்களும் நினைத்து ; உணர்ந்து ; அந்த மாயையிலிருந்து வெளியேறி விட்டோம். அதே மாயையில் தொடர்ந்தும் நீங்கள் பயணிக்கின்றதாகவே தங்களது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. அப்படியில்லாது அப்பிடியே தொடர விழைகிறீர்களோ தெரியாது. அனுபவம் தானாக வருவது. யாரும் சொல்லித் தருவதல்ல.
இறந்த பிணங்களை வீதியில் வைத்து ; அழுது பிழைப்பு நடத்துவதை தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை நாம் வெறுத்ததுண்டு. அதற்கு காரணம் ; அதன் பின்னணி தெரிவதால்தான். இவை படங்களில் சிரிப்பதற்காக இணைத்தவையல்ல. சிந்திக்க வைக்க இணைத்தவையாகும். அதே ஒன்றை கற்ற தமிழ் சமூகம் நம்பி கொட்டிக் கொடுக்கிறதே……… இல்லையென்றால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்திருக்காது.
இந்த செய்தியை பாருங்கள். புலிகளது ஒரு நிறுவனத்தின் முக்கியமான ஒருவர் கொழும்பில் கைதாகியுள்ளார். அங்கே மக்கள் வாடுவதாக கதை விட்டுக் கொண்டே ; தமிழர் பகுதிகளில் எதையும் செய்யாது ; சிங்களப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை வாங்கி ; பண முதலீடுகள் செய்து தம் வயிறு வளர்க்கிறார்கள். இது போன்ற ஒன்றிரண்டே தெரிய வருகிறது. கண்ணுக்கு தெரியாதவை பல்லாயிரம்…………..
தாய்வீடு கரண் கைது ; புலத்தில் வறுகிய பணத்தில் தமக்கு சொத்து சேர்த்ததோடு நிற்கவில்லை. இவர்களில் பலர் நாட்டிலும் சொத்து வாங்கப் பொய் மாட்டிக் கொண்ட ஒரு செய்தி. புலி; பொறியில் சிக்கிய எலியானது. புலிகளே தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நரகத்தில் ; வறுகியோர் சுவர்க்கத்தில் :
Powerful LTTE suspect who arrived from Switzerland arrested
(Lanka-e-News, Nov.29, 2010, 10.15PM) A suspected powerful member of the LTTE Organization who had come from Switzerland and was staying at Colombo Hilton Hotel was taken into custody on 25th November by the Terrorist investigation division (TID).
It is reported that his name is Karan and the TID had arrested him following information received from Switzerland..
Karan had been a powerful member of the LTTE in the East and north war operations. Later in 1990 he had left for Switzerland.
According to sources from the TID, since he fled, he had been collecting funds for the LTTE from Switzerland and has been engaged in arms procurement and supplies to the LTTE.
Though the TID took him into custody on the 25th of November, he had arrived in Sri Lanka a couple of weeks earlier. The TID had been trailing Karan and have had him under its surveillance until the time of his arrest, reports say.
Within the short period in SL following his arrival he has bought a tea estate 50 acres in extent at Deniyaya. He had also been preparing to open a foreign currency exchange center in Colombo, TID sources say.
-http://www.lankaenews.com/English/news.php?id=10348
விளங்காமுடி
அமலன்! வலியில் எழுதிய எழுத்தாகப் பார்த்தேன். உள்நாட்டின் இவ்வளவு பிரச்சனைகளை மறந்து, வெளிநாட்டுப் பிரச்சனைக்கு தீர்வு சொல்கிற வரிகள், எங்களை விழி திறக்க வைக்கிறது. இப்போது நீங்கள் யார் வழியில் எழுதுகிறீர்கள் எனப் பார்க்கக் கூடியதாகவிருக்கிறது.
BC
எனக்கு தெரிந்து முன்பு விடுமுறை எடுத்து இந்த புலி விழாவுக்கு போனவர்கள் இப்போ இரண்டு வருடமாக அப்படி செய்வதில்லை.
சமீபத்தில் வறுகிய பணத்தோடு ஜேர்மனியில் இருந்து தப்பியோடிய புலியை பொலிஸ் தகவல்படி ஸ்பெயினில் பிடித்து ஜேர்மனிக்கு நாடு கடத்தினார்கள். தனக்கு பங்கு கிடைகாததினால் இன்னொரு புலி இவரை பற்றி தகவல் சொன்னதாம்.
மாயா, சுவிஸ் உள்ள கவிஞராம் எழுதுகிறார்,
“இப்படியே சிவப்புச் சால்வைகாரனின் குடும்ப அரசியல் போய்க்கொண்டிருந்தால் எங்காவது ஒரு தமிழனுக்காவது கோபம் வராதா.பிரபாகாரன் போல இல்லாவிட்டாலும் கற்களைச் சேகரித்து ஒருவன் எறிய வரமாட்டானா என்ன”.
இங்கே இவர்கள் சொகுசாக இருக்க அங்கே ஒரு தமிழன் கல் எறிந்து சிறைக்கு போக வேண்டும்!
அமலன்
விளங்காமுடி “உள்நாட்டின் இவ்வளவு பிரச்சனைகளை மறந்து, வெளிநாட்டுப் பிரச்சனைக்கு தீர்வு சொல்கிற வரிகள், எங்களை விழி திறக்க வைக்கிறது. இப்போது நீங்கள் யார் வழியில் எழுதுகிறீர்கள் எனப் பார்க்கக் கூடியதாகவிருக்கிறது“
நான் யார் வழியிலும் எழுதவில்லை எனது வழியில் சிந்திக்கிறேன். உண்மை குறித்து பேசுவோர் எல்லாம் யாரதும் வழி என்றால் நானும் அந்த வழியென்றே நீங்கள் கருதிக் கொள்ளலாம். இங்கு பிரச்சனைகள் ஆயிரம் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று புலத்தில் இருப்பவர்கள் செயலாற்றிக் கொண்டிருப்பதால் தான் உங்களின் பிரச்சனையை கையாளுவது பற்றிக் குறிப்பிட வேண்டிவருகிறது. இல்லாவிட்டால் நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டு என்று சும்மா இருப்போம். அரசியலையும் நாங்களே பார்த்துக் கொள்வோம் ஆனால் அப்படி இருக்க நீங்கள் விடுகிறீர்கள் இல்லையே.
விளங்காமுடி
அமலன்!
பாதிக்கப்பட்டவர்கள் குறை பிடித்துக் கொள்ளும் நேரமல்ல இது. புதிய முகங்கள், புதிய தலைமை, புதிய சிந்தனை என்பதே எம்முன்னுள்ள உடனடித் தேவை. அது வேகமாக முன்னேறகிற போது, இந்த வெளிநாட்டுக்காரர் உங்கள் பின்னே வருவார்கள். எம் போராட்டம் ‘நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டு என்று சும்மா இருப்போம்.’ என்கிறதல்ல. ஒரு உள்ளும் வெளியும் இணகிற கூட்டு முயற்சி. அரசியல் என்பது சர்வதேச இணைப்புடன் பின்னி பிணைந்தது. அந்தப் பின்னல்களின் சூட்சுமங்கள் புரிந்தவர்களால் மட்டுமே, வெற்றிகரமான பாதையில் நடைபோடமுடியும். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுபவர்களால்ல. ஒரு ஆறுதலுக்காகவேனும் இதைப் பாருங்கள்.
-http://www.youtube.com/watch?v=WLDBgRAvmew
மாயா
விளங்காமுடிக்கு ; அமலனது வேதனை புரியவில்லை என நினைக்கிறேன். அதுபோலவே அங்குள்ளவர்களது அச்சங்களையும் ; வேதனைகளையும் பற்றிக் கவலை கொள்ளாது கருத்துகளை பதிய மாட்டார். இலங்கையில் போய் ; அங்குள்ள மக்களோடு ஒரு மாதம் வாழ்ந்தால் அங்கே உள்ள நிலமை புரியும்.