சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.