கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையில் நாடு முழுவதுமாக 55ஆயிரத்து 520 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 250 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைப்பதற்காக நாடு முழுவதும் 22 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தங்க வைத்து பராமரிப்பதற்கு சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வீடுகளை இழந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். தெற்கிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மழையால் வீதிகள் சேதமடைந்துள்ளன. அங்கு அதிகளவு புகைமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலங்களில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. வடக்கில் வன்னி மற்றும், யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. வன்னியில் தறப்பாள் கூடாரங்களில் தங்கியுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இம்மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலநிலை டிசெம்பர் மாதம் இறுதிவரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.