நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை – பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில்,
கொத்மலை – பியகம தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.
மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை – பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரியங்களுக்குள்ளாகினர். இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.
இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.