இளைஞர் பா¡ளுமன்றத்தின் முதலாவது தேர்தலில் 329 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி தெரிவாகியுள்ளனர். 332 மாவட்ட செயலாளர் பிரிவுகளை கேந்திரமயப்படுத்தி 1395 பேர் போட்டியிட்ட போதே மேற்படி 329 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஹொரவத்பத்தான, எஹலியகொடை ஆகிய மாவட்ட செயலக பிரிவுகளின் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரிவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இளைஞர் விவகார மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளரும் பிரதான தெரிவத்தாட்சி அதிகாரியுமான சூளோ ஹேவாபதிரன கூறினார். இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன் ரத்துச் செய்யப்பட்ட இரு தேர்தல் பிரிவுகளில் மீண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் உட்பட மொத்தம் 335 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.