ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.
இலங்கையின் மாணிக்கக்கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.
இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.