முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டிப் பகுதியில் இன்று வெள்ளிக்கழமை 150 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவிருந்த போதிலும் கடும் மழை காரணமாக அது தாமதமாகும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த முறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த 150 குடும்பங்களே அழைத்து வரப்பட்டு இன்று மீள்குடியமர்த்தப்படவிருந்தனர். மழை காரணமாகவும் மீள்குடியமர்த்தப்படவிருந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதாலும் வெள்ளம் வழிந்தோடிய பின்னரே இக்குடும்பங்களை மீள்குடியமர்த்த முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
முல்லை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 587 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 335 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் என முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது. இன்னமும் 18 ஆயிரம் பேர் வவுனியா மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ளனர். ஏனையோர் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.