தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக யாழ். குடாநாட்டில் 3640 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 750 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் சேதடைந்துள்ளன. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடாநாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சங்கானை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, பருத்தித்துறை, நல்லூர், கரவெட்டி, காரைநகர், சாவகச்சேரி ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நேற்றுவரை 750 வீடுகளும் சேதமுற்றுள்ளன. இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 2ஆயிரத்து 520 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை. கரைச்சி, ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளிலேயே கூடுதலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். முல்லை மாட்டத்தில் ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் அக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
வங்கள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.