கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையடுத்து படையினரின் உதவி பெறபட்டுள்ளது. 57வது படைப்பிரிவினரின் உதவி பெறப்பட்டுள்ளதோடு, திருகோணமலையிலிருந்து கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாதைகள் துண்டிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்காக நிவாரணப் பொருட்கள் கடற்படையினரின் படகுகள் ஊடாகவே தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.

கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கண்டாவளை ஆகிய கிராமங்களுக்கான ஒரேயொரு பாதையும் துண்டிக்கபட்டுள்ளது. தட்டுவன்கொட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு நிர்க்கதியான நிலையிலுள்ளன. இவர்களுக்கான போக்குவரவு மற்றும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தற்போது கடற்படையினரின் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லை மாவட்டத்திலும் பல வீதிகள் வெள்ளத்தால் துண்டிக்கபட்ட நிலையில் அப்பகுதி மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்கும் நோக்கில் நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் அவசர உதவி வழங்கும் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. உதவி அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்றும் இன்றும் மழை பெய்வது தணிந்து, காலநிலை ஓரளவு சீராகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *