இறுதிக்கட்டப் போரின் போது வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உதிரிப்பாகங்கள் நாளுக்கு நாள் களவாடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களே பெருமளவில் காணப்படுகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் உதிரிப்பாகங்கள் கழற்றப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
பொது மக்கள் தங்களின் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்கான பொலிஸ் முறைப்பாட்டுக் கடிதம் பெறுவது தொடக்கம் பல்வேறு ஆவணங்களை ஒழுங்கு படுத்துவதற்கிடையில் குறித்த வாகனங்களின் பாகங்கள் கழற்றப்பட்டு விடுவதாக தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சுமார் ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூவாயிரம் மோட்டார் சைக்கிள்களின் விபரங்கள் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் மோட்டார் வாகனப்பிரிவில் கணனியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.