நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட வாக்கெடுப்பின்பொது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்த்தது. தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்கிற காரணத்தினால் ஓரு நல்லெண்ணத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் நடவடிக்கையாக வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அதே வேளை இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமான நிதி பாதுகாப்பிற்கு ஒதக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது நிலை வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்கவில்லை. இந்நிலையில் 116 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன.