கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மத்தியில் காணிப்பிரச்சினைகள் பெரும் சிக்கலான ஒன்றாகியுள்ளது. காணிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அன்றாடம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வந்த வண்ணமுள்ளன.
கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றபட்டு வருகின்ற நிலையில், முன்னர் காணிகளை விற்றவர்கள் மீண்டும் அக்காணிகளைப் பிடித்து வருவதால் அக்காணிகளை கொள்வனவு செய்தவர்கள் சிக்கல்களுக்குள்ளாகி வருகின்றனர்.
கிளிநொச்சியில் பெருமளவு காணிகள் காணிஉறுதிகள் வழங்கப்படாமல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கபட்ட நிலையிலுள்ளதால் அவற்றை விற்பனை செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆனால், உறவினர்களுக்கு அக்காணியை மாற்றம் செய்வதாக காணி அலுவலங்களில் மாற்றங்களை மேற்கொண்டு காணிகள் விற்பனை செய்யப்படும் வழக்கம் உள்ளது. இவ்வாறு விற்பனை செய்யபட்ட காணிகளில் பழைய உரிமையாளர்கள் தங்களது காணி என உரிமை கோரி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் தினமும் காணி அலுவலகத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் வந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.