யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் காணப்பட்ட கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், குடாநாட்டு மக்கள் அச்சம் கொள்ளும் வகையிலான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
நேற்றிரவு யாழ்.சங்கானையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமும் கொள்ளையிடப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கத்தி வெட்டுக்குள்ளாகிய சம்பவமும் அப்பகுதி மககள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கானை இழுப்பைத்தாழ் முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்கள் வீட்டிற்குள் கொள்iளையிட வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவரது மோட்டார் சைக்கிகளை அபகரித்துச் சென்றதுடன் அவரையும் அவரது இரு மகன்மார்களையும் துப்பாக்கியினால் சுட்டும், வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நித்தியானந்த குருக்களும், அவரது இரு மகன்மார்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆலய குருக்கள் வவுனியாவிலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு நேற்று சனிக்கிழமை சங்கானையிலுள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 8.40 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த மூவர் மோட்டார் சைக்கிளை களவாட முற்பட்டுள்ளனர் இதனைத் தடுக்க முற்பட்ட குருக்களையும் அவரது இரு மகன்மாரையும் துப்பாக்கியினால் சுட்டும் வாளால் வெட்டியும் கொள்ளையர்கள் காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் சி.நித்தியானந்த குருக்கள் (வயது 56) அவரது மகன்மாரான ஜெகானந்தசர்மா (வயது 26) சிவானந்தசர்மா (வயது 32) ஆகியோரே கொள்ளையர்களினால் காயப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.