கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவுக்கு ரிபிசி வானொலி வழங்கிய அறிக்கை.

TBC_Logoபிரித்தானியாவில் செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 22-11-2010

கற்க வேண்டிய பாடங்களையும் நல்லெண்ணத்திற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கழு முன்னிலையில் எமது அவதானிப்புகளை வழங்கச் சந்தர்ப்பம் தந்தமைக்கு எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குலக நாடான பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் இயங்கும் எமது வானொலிச் சேவை ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் நேரடியாகவும், சர்வதேச அளவில் இணையத்தளத்திலும் தனது சேவையை வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களைப் பேணும் வகையில் செயற்படுமாறு தூண்டுதல், இன, மத, நிற, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை என்ற சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுதல், இலங்கையின் ஐக்கியம், இனங்களுக்கிடையேயான நல்லுறவுகளை வளர்த்தல், பயங்கரவாதம், வன்முறை, மனித உரிமை மீறல் என்பவற்றிற்கெதிராக செயற்படுதல் என்பவற்றை பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது சேவையை வழங்கி செயற்பட்டு வருகிறது.

எமது வானொலியின் சேவைகளும் செயற்பாடுகளும் இலகுவாக அமைந்ததில்லை. இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்களோ, அதே மாதிரியான அழுத்தங்களுக்கு எமது சேவையும் முகம் கொடுத்தது. எமது சேவை வெறுமனே ஒலிபரப்புடன் நிறுத்திக் கொள்ளாது மக்கள் மத்தியில் சென்று பிரச்சனைகளை நேரடியாகவும் கலந்துரையாடல்கள் மூலமும் விளக்கி வந்தது. இதனால் பலர் பல்வேறு மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வானொலி நிலையமும் பல தடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

இந்தப் பின்னணியிலிருந்தே கடந்த 2002 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் நிலமை, மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? என்பதனையும் அக் காலப்பகுதியில் மக்களின் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்புகள் என்ன? என்பதனையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறோம். எமது வானொலி பல ஆயிரக் கணக்கான நேயர்களைக் கொண்டிருப்பதோடு, மிகப் பெருந் தொகையானவர்களுடன் இடையறாத தொடர்புகளையும் பேணி வருகிறது. அந்த வகையில் ஐரோப்பாவில் மற்றும் மத்திய கிழக்கில் தங்கி வாழும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் மனப் போக்கினை எம்மால் ஒரளவு தர முடியும் என நம்புகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அவர்கள் தலைமையிலான அரசிற்குமிடையே நோர்வே நாட்டில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது எமது வானொலிச் சேவை இலங்கை வானொலி ஊடாக தனது சேவையை அங்கும் விரிவுபடுத்தியது. இச் சேவையின் தாக்கங்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது தாயகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் விடுதலைப்பலிகள் எமது இலங்கைச் சேவையை தடைசெய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி அதிலும் வெற்றி கண்டார்கள்.

ஐரோப்பாவின் பல பாகங்களிலே தமிழர்கள் பலர் அகதிகளாக குடியேறினர். இவர்களில் கணிசமான தொகையினர் அரசியல் நடிவடிக்கைகளில் மற்றும் வன்முறைகளோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர். இதில் ஒரு சாரார் புலிகளுடன் தொடர்புகொண்டவர்களாக அல்லது போராளிகளின் குடும்ப உறுப்பினர்களாக அல்லது நெருக்கமான சம்பந்தம் கொண்டவர்களாக காணப்பட்டனர். மற்றொரு சாரார் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் தமிழீழம் புலிகளால் சாத்தியமாகும் என நம்பினார்கள். மிக நீண்ட காலத்திற்கு போராட்டம் தொடர்ந்ததாலும், ஆயுதப் போராட்டம் காரணமாக கிடைத்த வெற்றிகளும், ராணுவத்திற்கு கிடைத்த தோல்விகளும், அவ்வப்போது அரசு புலிகளுடன் பேச எடுத்துக்கொண்ட எத்தனிப்புகளும் அவர்களது நம்பிக்கையை பலப்படுத்தின. தமிழ் தேசியத்தினை ஆதரித்த மற்றொரு சாரார் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இனப்பிரச்சனைக்கான தீர்வு இல்லை என்ற நிலை காணப்பட்டதாலும், ராணுவ ஒடுக்குமுறை மூலம் இனப் பிரச்சனையை நசுக்க எடுத்த முயற்சிகளால் மனமுடைந்ததாலும் வேறு வழியின்றி புலிகளை ஆதரித்தார்கள்.

இவர்கள் பிரச்சனைக்கான தீர்வு என்பது ஆயுத வன்முறை மூலமாகவோ அல்லது தமிழீழக் கோரிக்கையின் மூலமாகவோ சாத்தியமாகாது எனத் தெரிந்துள்ள போதிலும் புலிகளின் ஜனநாயக மீறலை மௌனமாக ஏற்றுக்கொள்ள புறச் சூழல்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஐரோப்பிய நகரங்களில் பல்வேறு ஆரப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதற்கான பிரதான காரணம் தமிழீழம் அல்லது வன்முறைக்கான ஆதரவு என்பதை விட தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான குரலை ராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்க விழையும் போக்கிற்கு எதிரான மன உணர்வின் வெளிப்பாடு என்றே எம்மால் குறிப்பிட முடியும். ஐரோப்பாவில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழர்கள் சில உள்ளுராட்சி எல்லைகளுக்குள் கணிசமான தொகையில் வாழ்வதால் அவர்கள் தேர்தலின் போக்கை நிர்ணயிப்பவர்களாகவும் உள்ளனர். இதனால் சில பிரதேசங்களிலுள்ள தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துவதோடு புலிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு இனப் பிரச்சனையில் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்காத வரை ஐரொப்பிய அரசுகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட விரும்புகிறோம். இதனை புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசுக்கு எதிரான பிரச்சாரமென அரசு கருதுமாயின் அது தவறாகும். ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் ஒரு சாரார் குறிப்பிடத்தக்க வகையில் அமைப்பு வடிவில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பிரதான காரணம் புலிகளுக்கான நிதி திரட்டலுக்கு இது அவசியமாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பவற்றை அடிக்கடி வைப்பதன் மூலம் இவர்களை உற்சாகம் குறையாமல் வைப்பதும் அவசியமாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளின்போது அரசியல் தீர்வு குறித்த அறிவுபூர்வமான கருத்துக்களோ அல்லது விவாதங்களோ இடம்பெறுவதில்லை. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ராணுவ அத்துமீறல்கள் வர்ணிக்கப்பட்டன. வன்னியில் முப்படைகளின் துணையுடன் அரசு ஒன்று இயங்குவதாகவும் அதனைப் பலப்படுத்த பணம் தேவை என்பதே பிரதான பேச்சாக அமைந்திருந்த போதிலும், இவ்வாறான பலம் பொருந்திய அமைப்பு ஒன்று அமைந்தால் மட்டுமே அரசு பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்பும் என்பதே மையப் பொருளாக அமைந்து வந்தது.

எனவே புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்பது தனி அரசு என்பதை விட தனியான பலமான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவது ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வைப் பெறுவதற்கு ஓர் பலமான உந்துதலை அளிக்கும் என்பது பொதுவான போக்காக அமைந்திருந்தது. இதனை மே 19ம் திகதிக்கு பின்னதான நிகழ்வுகளும் எமக்கு உணர்த்திநிற்கின்றன. மேற்குலக நாடுகளில் கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை என்பது புலிகளின் பண வசூலிப்புடன் பொருத்தியே அவதானிக்கப்பட வேண்டும்.

மே 19 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானிக்கும்போது புலிகளின் பினாமிகளால் செயற்கையாக தூண்டிவிடப்பட்ட போலித் தமிழ் தேசியவாதம் அதன் தோல்வியை அடைந்துள்ளது என்றே கூறவேண்டும். ஆனால் உண்மையான தமிழ்த் தேசியவாதம் தற்போது விழிப்பு நிலைக்கு வந்துள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்குப் பிரதான காரணம் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் இயலாத் தன்மை அம்பலமாகியதும், புலிகளின் தோல்வி, முள்ளி வாய்க்கால் அனுபவங்கள், இடம் பெயர்ந்த மக்களின் அவலங்களும் அனுபவங்களும், இன்றைய அரசின் இனப் பிரச்சனை தொடர்பான போக்கு என்பன புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதேயாகும்.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக புலிகளின் ஆதரவாளர்கள் என அரசு தொடர்ந்து கூறிவரும் போக்கும், நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் நாடகத்தினை பூதாகரமாக காட்ட முனைவதும், இவற்றினைக் காரணம் காட்டி தமிழ்ப் பிரதேசங்களில் ராணுவ முகாம்களை பலப்படுத்துவதும், அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமான குடியேற்றங்களை நிறுவ எத்தனிப்பதும், பௌத்த விகாரைகளை தனியார் நிலங்களில் நிறுவப்படுவதை பாராமுகமாக ஆதரிப்பதும் அரசின் மீதான அதிருப்தியையும், அவநம்பிக்கைiயும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல மே 19ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலே ஏதோ ஒரு வகையில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணரும் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏமாற்ற உணர்வு ஒரு புறத்தில் ஓர் புதிய தேசத்தை நோக்கிய அணுகுமுறையை நோக்கி ஒரு சாராரை தள்ளியுள்ள அதேவேளை இன்னொரு சாரார் சர்வதேச ஆதரவை நோக்கித் திரும்பியுள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த அணுகுமுறை இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அணுகுமுறையாக அமையலாம் அல்லது தேசவிரோத சக்திகளுக்கு துணைபோவதாகவும் அமையலாம். இவை எந்த விதத்திலும் விரும்பத்தக்க ஒன்று அல்ல என்ற போதிலும் இவ்வாறான ஓர் நிலமைக்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களே என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆணையாளர்களே!

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான அரசியல் தீர்வை நோக்கி சிந்திக்கிறார்கள். செயற்படுகிறார்கள். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளாலும் ( புலிகள்உட்பட ) சிங்களத் தலைமைகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளதை நன்கு உணர்கிறார்கள். மாற்று அணுகுமுறை ஒன்றின் அவசியத்தை நோக்கிச் செல்ல விழைகிறார்கள்.

2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமிழ்ப் பகுதிகளிலேயும், கொழும்பிலும் நிலங்களையும், வீடுகளையும் வாங்கினார்கள். இத் தருணத்தில் புலிகள் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்திய போதிலும் இத் தயாரிப்பு என்பது தமிழ்ப் பிரதேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகவே கருதினார்கள். புலிகளும் அப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் வரப்போவதாகக் கருதி தங்களது ஒடுக்குமுறை மூலம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்.

புலிகளின் ஆதரவாளர்கள் பலர் வன்னியில் காணிகளை வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. எனவே போர் என்பது மணலாற்றில் ஆரம்பிக்கப்பட்டது என்ற போதிலும் அது ராணுவத்தினால் திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. போர் நிறுத்த காலத்தில் மேற்குலக நாடுகளிலிருந்து பலர் இலங்கை சென்றிருந்த போதிலும் அவர்களது அனுபவங்கள் எதிர்மறையாக இருந்தன.

கொழும்பில் தங்கியவர்கள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யவும், உறவினர்களின் வீடுகளில் தங்கியதால் உறவினர் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை, வடக்கு-கிழக்கு பகுதியிலிருந்து கொழும்பில் தங்கிய இளைஞர்கள் இரவோடிரவாக வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டமை, வர்த்தகர்கள், வெளியிலிருந்து சென்றவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை என பல நிகழ்வுகளால் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தலை நகரத்தில் பாதுகாப்பற்ற தன்மையும், குற்றவாளிகள் எவருமே நீதியின் முன்னால் நிறுத்தப்படாததும் தமிழர்களின் எதிர்காலம் குறித்த அச்சங்களை அனுபவ ரீதியாக ஏற்படுத்திருந்தன. இது ஒரு புறம் தொடர மறு பக்கத்தில் குறிப்பாக வடபகுதி சென்றவர்களின் கடவுச் சீட்டுகள் பறிக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு பயமுறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின. இவை புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. இவை சமாதானத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததோடு மீண்டும் தாயகம் திரும்பும் நம்பிக்கையைச் சிதறடித்தது.

தற்போது நிலவும் சூழலும் அவ்வாறான மனநிலையையே மீண்டும் தோற்றுவித்துள்ளது என்பதனைத் தெரிவிக்க விரும்புகிறோம். நீண்ட காலம் தொடர்புகளை இழந்திருந்த தமது உறவினர் நண்பர்களை மீளச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதாக கருதுகிறார்களே தவிர சமாதானத்தின் மீது நம்பிக்கை எழவில்லை. போரின் கொடுமைகளிலிருந்து தப்பியுள்ளதாக கருதுகிறார்களே தவிர உரிமை பெற்ற இனமாக வாழமுடியும் என்ற எதிர்பார்ப்பை இழந்தே வாழ்கிறார்கள்.

ஆணையாளர்களே!

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் போருக்குப் பின்னதான நிகழ்வுகள், மாற்றங்களின் அனுபவங்கள் மூலம் அரசியல் எதிர்காலம் குறித்து பரந்த அளவில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக சர்வகட்சி மாநாட்டுக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் குறித்து எமது வானொலி பரந்த அளவில் விவாதங்களை நடத்தியது.

இதில் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம், மற்றும் நிசாம் காரியப்பர் போன்றோர் பங்களித்தனர். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக அதிகார பரவலாக்கத்திற்கான குறைந்தபட்ச அலகாக மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளுதல், அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட 3வது அட்டவணை ( யுnநெவசந உ) நீக்கப்படுவதை ஆதரித்தல், மாகாணசபையின் செயற்பாட்டு எல்லையை தெளிவாக வரையறுத்தலும், சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குதலும், இரண்டாவது சபையான செனட் சபை உருவாக்கத்தின் தேவையையும் உள் நோக்கங்களையும் ஆதரித்தல் என்பவற்றில் பலத்த உடன்பாடு காணப்பட்டது. சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகளின்போது ஐரோப்பிய நாடுகளில் பொதுவான ஆர்வம் காணப்பட்டதும், போரின் பின்னர் அதற்கான ஆதரவு அதிகரித்து வருவதும் கவனத்தற்குரியதாகும்.

ஆணைக்குழுவின் விசாரணைக்கான கால எல்லை 2002-2009 எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பிரச்சனைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால் இக் கால எல்லை என்பது மொத்தப் பிரச்சனைகளின் ஓர் குறிப்பிட்ட பகுதியே ஆகும். எனவே 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் அதன் தோல்விகளும் வெறுமனே புலிகளின் திட்டமிட்ட மீறல் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், அதன் காரணமாக எழுந்த ஒப்பந்தங்கள், அவை தோல்வியில் முடிந்தமைக்கான பின்னணிகள் என்பனவும் இதற்குக் காரணிகளாக அமைந்தன. பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பன முக்கியமானவை. இருந்த போதிலும் இலங்கை- இந்திய ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். முதன் முதலாக வெளிநாடு ஒன்றின் உதவியுடன் உள் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சி ஆகும். இதற்கு சர்வதேச ஆதரவும் கிட்டியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் தரப்பு ஓர் பகுதியாக அமையாத போதிலும் இரு அரசுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என இதனைக் கருத முடியும்.

இந்த ஒப்பந்தமும் இனங்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருவதற்குப் பதிலாக மேலும் இடைவெளியை அதிகமாக்கிய ஒன்றாகவே அமைந்தது. இலங்கை அரசு விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தினை பலவீனப்படுத்திய நிலமைகளும், இந்திய சமாதானப் படைகளுக்கும், புலிகளுக்குமிடையே போர் ஏற்பட்ட வரலாறுகளும் அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அனுபவங்களும் 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தமும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையை எவருக்கும் தரவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனப்படுத்தப்பட்டதும், இதன் குறைபாடுகளை மையமாக வைத்து ஐ தே கட்சி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும், போருக்கான தயாரிப்புகளும் இனப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்காக எடுத்துகொண்ட முயற்சிகளின் உள் நோக்கங்களை இப்போது நன்கு உணர்த்துகின்றன. புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும், தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கான போர் எனவும், போரை விமர்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் எனவும் வர்ணிக்கப்பட்டது. இதன் சாராம்சம் இனப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை முற்றாக மறைத்தது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை தேச விரோத சக்திகளாக அடையாளம் காட்டும் எத்தனமும் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டைக் காப்பாற்றுவதாகக் கூறும் பிரச்சாரம் அதுவாகவே அமைந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க உதவியதாகவும், ஐ தே கட்சி புலிகளின் தோழர்கள் என வர்ணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களும் ஐ தே கட்சியும் தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

போரின்போது முன் வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் இனப் பிரச்சனைக்கான புதிய பாதையை அறிவிக்காமல் தீவிர சிங்கள தேசியவாத கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டதால் அவை சிறுபான்மை இனங்கள் மத்தியிலே மிகவும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த போது புலிகளின் முக்கிய தலைவர்கள் மேற்கு நாடுகளில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் தமிழர்களுக்கான தனியான. சுயமான நிர்வாகத்தைப் பெறுவதற்கு வாய்ப்பை அளித்துள்ளதாகவம், சம பலமே இச் சந்தர்ப்பத்தை அளித்தது எனவும் கூறி பலமான ராணுவக் கட்டமைப்பிற்கான பண உதவியின் தேவையை மறைமுகமாக வலியுறுத்தினார்கள்.

இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போது வன்னி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டே பேச்சவார்த்தையில் இறங்கினார்கள் எனவும், தமது படை வலிமையையும் ஏற்றுக் கொண்டார்கள் எனவும் கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் போர் நிறுத்த தோல்விக்கு ஒப்பந்தம் சரியாக அமுல்படத்தப்படவில்லை. கண்காணிப்புக்குழு உரிய முறையில் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். அவ்வாறானால் இரு சாராருமே சமாதானத்தைத் தரக்கூடிய வலுவான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கவில்லை. பெயரளவிலான ஒன்றை நோக்கியே செயற்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படை.

ஐரோப்பிய நகரங்களில் புலிகளின் செயற்பாடுகள் வன்னி அரசைப் பலப்படுத்தும் போக்கை மட்டுமே கொண்டிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து இதர ஜனநாயக சக்திகள் எச்சரிக்கை செய்து வந்தன. ஆனாலும் இவற்றின் பலம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசின் திட்டமிட்ட அசமந்த போக்கே எனலாம்.

வடக்கு கிழக்கில் புலிகளின் ஜனநாயக விரோத, பயங்கரவாத, வன்முறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அமைப்புகள், தனி நபர்கள் என்போரைப் பலப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இவர்கள் தமக்குள்ளே போரிட்டு அழிய வேண்டும் என்பதே நிலைப்பாடாகவே இருந்தது. இதே நிலமைதான் மேற்கு நாடுகளிலும் காணப்பட்டது. இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிக அளவில் இடம்பெற்றபோது கவலை அடைந்திருந்த அரசு இப் பாகங்களில் செயற்பட்ட ஜனநாயக சக்திகளை இனம் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்ட போதும் அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதால் கைவிடப்பட்டார்கள்.

இவ் ஜனநாயக சக்திகள் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள். புலிகளினதும், அரசினதும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தினார்கள். உதாரணமாக புலிகள் சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைக்கும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளிடம் சமர்ப்பித்தார்கள். இலங்கை அரசின் தூதுவராலயங்கள் இச் செயற்பாடுகள் பற்றிய மதிப்பீட்டைமேற்கொண்டு உரிய வகையில் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தூதுவராலயங்களும் ஆட்சியாளர்களின் கட்சி சார்பான நியமனங்களாக அமைந்ததால் அவர்களும் தமக்கு ஏற்ற வகையில் அவ்வப் பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுடனான உறவகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகராக பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ராஜதந்திர சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டிருந்ததால் சகல பிரிவினரும் சந்தித்து விவாதிக்கும் ஒரு தளமாக சிலகாலம் அமைந்தது. இது அதிக காலம் நீடிக்கவில்லை. இது குறுகிய கால நிகழ்வு என்ற போதிலும் புதிய அனுபவத்தை அதாவது தூதுவராலயம் இன நல்லிணக்கத்தில் வகிக்கக்கூடிய பாத்திரத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை எமக்கு அளித்தது. ஆனால் இப் பெண்மணிக்கு முதலும் அதன் பின்னரும் நியமிக்கப்பட்டவர்கள் தமிழர்களின் உறவை புலிகளுக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்த தலைப்பட்டார்களே தவிர இன இணக்கத்தின் அவசியத்தை புரிந்துகொண்டவர்களாக இல்லை. இத் தூதுவராலயங்கள் உளவுத்துறை நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பனவாக உள்ளனவே தவிர இன இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவும் தயாராக இல்லை. அவர்கள் அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றனரே தவிர சகலரும் இலங்கையர் என்ற பொது அடையாளத்தில் இணைக்க தயாராக இருக்கவில்லை.

அடுத்து தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக காணப்புடும் நிலமைகள் குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப் பிரதேச அபிவிருத்தியில் அப் பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படாமல் அரச அதிகாரிகள், ராணுவம் என்பனவே முக்கிய தீர்மானம் எடுக்கும் கருவிகளாக உள்ளன. இது ஊழல், வீண் விரயம் என்பவற்றிற்கான வடிகால்களாக அமைவதை சர்வதேச அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. போரின் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தமது நிலங்களுக்குச் செல்வது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாம்கள் அமைத்தல், நிலக்கண்ணி அகற்றப்படாது இருத்தல், நிலங்களின் உரிமை தொடர்பான சர்ச்சைகளைக் காரணம் காட்டி தடுத்தல், புலிகளால் சட்ட விரோதமாக மாற்றப்பட்ட நில உரிமம் தொடர்பான பிரச்சனைகள், புதிய சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைத்தல் என்ற போர்வையில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த பாரம்பரிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுதல் என மிக நீண்ட பட்டியல் தொடர்கிறது. இத் தீர்மானங்கள் அப் பகுதி மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படுகிறது என்றால் அவை பற்றி போதிய தகவல்களை வழங்காமல் தவிர்க்கப்படுவது சந்தேகங்களை வலுப்படுத்துவதாக உள்ளது.

நிலப் பிரச்சனை என்பது உள்ளுரில் ஓர் சிவில் யுத்தத்தினை ஏற்படுத்துவதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் விலக்கப்பட்டால் சிவில் யுத்தம் தவிர்க்க முடியாமல் போகும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. எனவே இப் பிரச்சனை சட்ட ரீதியாக தீர்ரக்கப்படுவது அவசியம் என்பதால் அங்கு சிவில் நிர்வாக செயற்பாடு தேவையாகவே உள்ளது. வெளிநாடுகளில் வாழ்வோர் பலரின் நிலங்கள், வீடுகள் என்பன சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்து பெரும் கவலை பலரின் மத்தியில் காணப்படுகிறது. இந்த அச்சம் போக்கப்படுவதற்கு மக்களின் பங்களிப்புடனான பொது நிறுவனங்கள் செயற்பட வழி செய்யப்பட வேண்டும்.

தாயகத்தில் முதலீடுகளை எதிபார்க்கும் அரசு அம் மாதிரியான முதலீட்டீற்கு குந்தகமாக உள்ள நிலமைகளை மாற்ற உதவ வேண்டும். இதில் பிரதான தடையாக இருப்பது முதலீட்டிற்கான பாதுகாப்பு ஆகும். அரசின் மீது காணப்படும் சந்தேகங்கள் குறிப்பாக முதலீடுகள் நேரடியாக குறிப்பிட்ட பிரதேசத்திற்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கான நிர்வாக ஒழுங்குகள் அங்கு காணப்படவில்லை. அப் பிரதேசத்திலுள்ள மாகாண சபைகள் பூரண அதிகாரத்துடன் செயற்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு. மத்திய அரசு எண்பார்வைக் குழுவை நியமித்தால் அது போதுமானதாக அமையும்.

இலங்கையில் இன இணக்கம், வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்பன எற்பட வேண்டுமாயின் வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றிருக்கும் இலங்கையர் இரட்டைப் பிரஜா உரிமை பெறும் வகையில் நாட்டின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இது முதலீட்டுககான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள பலர் தமது இறுதிக் காலத்தை தமது தாயகத்தில் கழிக்க வேண்டும் என்ற விருப்போடு வாழ்கின்றனர். அத்துடன் பல கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், அனுபவஸ்தர்கள் என்போரின் வருகை நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ள ஓர் ஊடகமாக உள்ள தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் நன்றி கூறும் அதே வேளை இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தை நாட்டில் வாழும் சகல சிறுபான்மை இனங்களும் மகிழ்ச்சியோடு ஏற்று செழுமை பெறுவதற்கு பெரும்பான்மை இனத்திலிந்து காத்திரமான மாற்றங்கள் ஏற்படவேண்டும். இந்த மாற்றங்கள் ஸ்தாபன ரீதியாகவும், அரசியல், சமூக, கலாச்சார மாற்றத்தினூடாகவும் மட்டுமே சாத்தியம் என உறுதியாக நம்புகிறோம். இந்த ஆணைக்குழுவின் பணி மிகவும் காத்திரமானது என்பதால் இதன் அமர்வுகள் வெளிநாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டால் நாட்டின் சகல பிரிவினரினதும் ஒட்டுமொத்தமான அபிப்பிராயத்தின் வெளிப்பாடாக அதன் அறிக்கை அமையும் என்பது எமது அவா ஆகும் என்பதை தெரிவித்து முடித்துக் கொள்கிறோம்.

வீ.இராமராஜ்
வி.சிவலிங்கம்
செ.ஜெகநாதன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Sabes Sugunasabesan
    Sabes Sugunasabesan

    This is a balanced and progressinve contribution.

    “ஐரோப்பிய நகரங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதற்கான பிரதான காரணம் தமிழீழம் அல்லது வன்முறைக்கான ஆதரவு என்பதை விட தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான குரலை ராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்க விழையும் போக்கிற்கு எதிரான மன உணர்வின் வெளிப்பாடு என்றே எம்மால் குறிப்பிட முடியும்”.

    This is very true. The reaction aganist a sense of justice will spread outside the Tamil community too. Sri Lankan government cannot continue dismiss these are as response of LTTE supporters.

    Reply
  • aras
    aras

    அடடா ரிபிசிக்கும் ஒரு அரசியல் இருக்கிறதா?

    Reply
  • karuna
    karuna

    அப்ப புலிக்கு மட்டுமா அரசியல் இல்லை என்று நினைத்தீர்கள்? இராமரஜனுக்கு ஒரு அரசியல் சிவலிங்கத்திற்கு ஒரு அரசியல் ஜெகநாதனுக்கும் ஒரு அரசியல்! இது மூன்றும் கலந்த ஒரு கலவைதான் ரீபிசி அரசியல்!

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்த அறிக்கையில் புதிதாக ஒன்றையும் காணவில்லை. வழக்கமான ஆனந்த சங்கரி அறிக்கை போலவே தெரிகிறது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இந்த அறிக்கையில் புதிதாக ஒன்றையும் காணவில்லை. வழக்கமான ஆனந்த சங்கரி அறிக்கை போலவே தெரிகிறது.//
    நந்தா இப்படி எல்லாம் அரசியலில் உண்மை பேசி பழககூடாது; ரி பி சி க்கு இப்படியும் ஒரு அர்த்தம் உண்டு தனக்கு பிடித்ததே சிவலிங்கத்துக்கும்,,,,,,,,,,,, இதுக்கான விடை அடிக்கடி அரசியல் அங்கலாய்ப்பை கேக்கவும்;

    Reply