ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்விகள் கேட்க அக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், இக்குழுவினரிடம் நல்லிணக்க ஆணைக்குழுவே கேள்விகள் கேட்கும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிபுணர் குழுவினர் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் விசேட சலுகைகள் எவையும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், இதுவரை சாட்சியமளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளே அவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.
ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அரசமட்டத்தில் அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்த நிபுணர்குழு வருகை தருமா? அவ்வாறு தந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு அதன் சாட்சியங்களை அளிக்குமா? போன்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.