இந்தியாவினால் வடக்கில் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணித்து கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளுக்கு இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் முன்வைக்கபட்டது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் தேவைகளையும் இது ஓரளவு உள்ளடக்குகின்றது. தளநிலைமையைக் கருத்தில் கொண்டு பெரும் எண்ணிக்கையான வீடுகளை புதிதாக நிர்மாணித்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் தங்கள் வீடுகளைப் புனரமைக்க விரும்பும் குறைந்த எண்ணிக்கையினருக்கும் உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். முதற்கட்டப் பணிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்டப் பணிகள் விஸ்தரிக்கப்படும். இடம்பெயர்ந்த மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்தின் மூலம் குறித்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் இந்திய அரசின் விருப்பமாகும் என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்திய நிதியுதவியில் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்ட ஐம்பதாயிரம் வீடுகளுக்கு பதிலாக ஐயாயிரம் வீடுகள் மட்டுமே புதிதாக கட்டப்படும் எனவும், மிகுதி 45ஆயிரம் வீடுகள் புனரமைப்பு செய்து கொடுக்கப்படும் எனவும் வெளியான ஊடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் விதமாகவே இந்தியத் தூதரகத்தினால் இந்த அறிக்கை விடுக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.