– பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. சேர்ந்து வாழவும் தயாரில்லை –
பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்கள் அரசு இன்று வெளியிட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானது என்பதே மிகக் கசப்பான உண்மை. இதுவரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இறக்கின்ற போதே கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எனப் பதிவு செய்கின்றனர். வயோதிபர் இல்லங்களில் மரணமடைந்தவர்கள் நேற்றுவரை இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் வயோதிபர் இல்லங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக நேற்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 என்றே அரசு அறிவித்து உள்ளது.
அப்படியானால் 50,000 பேர் என்ற கணிப்பு எப்படி வந்தது என்பது முக்கியம். பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மரணமும் ஓஎன்எஸ் – Office for National Statistics புள்ளிவிபரத்திற்கு வந்தடையும். அதன்படி கடந்த ஆண்டுகளில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடே 50,000 பேர் கோவெட்-19 காரணமாக நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அப்படியானால் அரச புள்ளி விபரம் எப்படி இந்த இருட்டடிப்பைச் செய்தது என்ற மற்றுமொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அரசு ஏற்கனவே வீடுகளிலும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களிலும் நிகழும் மரணங்களை கோவிட்-19 எனப் பதிவு செய்வதை தவிர்க்கின்ற வகையில் கடுமையான பதிவுமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் பொதுமருத்துவர்கள் வயோதிபர்களின் மரணத்தைப் பதிவு செய்கின்ற போது கோவெட்-19 அல்லாத காரணங்களால் (chronic conditions such as heart disease, cancer, stroke, diabetes, and Alzheimer’s disease) மரணம் சம்பவித்ததாக பதிவு செய்கின்றனர். மேலும் கோவெட்-19 ரெஸ்ட் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களால் நிகழ்ந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.
மற்றுமொரு தொகை மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு, மற்றும் உயிராபத்து ஏற்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் மருத்துவ வளங்கள் மனிதவளம் உட்பட கோவெட்-19க்கு திசை திருப்பப்பட்டு உள்ள நிலையில் பல அவசர சத்திர சிகிச்சைகள் கூட பிற்போடப்பட்டு உள்ளது. இவைகளும் கூட மரண எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. அரச அறிவிப்புகளிலேயே 25 வீதமான கூடுதலான மரணங்கள் நிகழ்வதை உறுதிப்படுத்தி உள்ளது.
பத்து ஆண்டுகள் கொன்சவேடிவ் ஆட்சியில் பிரித்தானிய மருத்துவத்துறை மிகப்பலவீனமான நிலையில் இருந்த போதே கோவெட்-19 ஆபாயத்திற்கு முகம் கொடுத்தது. அப்போது 50.000 வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே பிரித்தானிய சுகாதார சேவைகள் கோவிட்-19 உடனான தனது போரை ஆரம்பித்தது. தற்போது உலகின் வறிய நாடுகளில் இருந்து மருத்துவ தாதிகளை வரவழைப்பதற்கான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தளர்த்தி உள்ளார். அவ்வாறான மருத்துவ தாதிகளையும் மருத்துவர்களையும் வரவழைக்க முயற்சிக்கும் உள்துறை அமைச்சர் அவர்களின் குடும்பங்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் இறுக்கமாகவே வைத்துள்ளார்.
பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. ஆனால் மற்றையவர்களோடு சேர்ந்து வாழவும் தயாரில்லை என்ற நிலையில் பிரித்தானிய கொன்வேட்டிவ்கள் செயற்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வீம்போடு வெளியேறியவர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் மற்றவர் கைகளை எதிர்பார்க்கின்றனர்.