வட – கிழக்கில் கூட்டமைப்பின் சரிவும், 2020 தேர்தல் முடிவுகள் தந்த படிப்பினைகளும்! – அருண்மொழி

நடந்து முடிந்த இலங்கையினுடைய ஒன்பதாவது பாராளுமன்றத்தேர்தல் இலங்கையின் அரசியல் பொருட்டு எதிர்பார்க்காத பல திருப்பங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையை அடுத்த 05 ஆண்டுகள் ஆள்வதற்கான ஆணையை பொதுஜன பெரமுன  கட்சிக்கு வழங்கியுள்ள மக்களுடைய தீர்ப்பானது பழம்பெரும் கட்சிகளைஅரசியல் அரியாசனத்திலிருத்தே தூரத்தூக்கி வீசிவிட்ட சோகமும் இந்த தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் மத்திய ஆட்சி நிலை மாற்றங்கள் இவ்வாறு இருக்க  தமிழர் அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய அபத்தங்களையும் ஒரு விதமான அரசியல் வெற்றிடத்தையும் இந்தத்தேர்தல் தோலுரித்துக்காட்டியுள்ளதுடன் எதிர்கால நகர்வுகள் எத்தன்மையனவாக அமையும் வேண்டும் என்பதையும் சிந்திக்கச்செய்திருக்கின்றன இந்தத்தேர்தல் முடிவுகள். இந்த கட்டுரையின் நோக்கமும் 2020 தேர்தல் முடிவுகள் கற்றுந்தந்த பாடங்கள் என்ன என்பதை தமிழர் தாயகமான வட-கிழக்கை மையப்படுத்தி நோக்குவதாக அமைந்து கொள்கின்றது.
தமிழர்களின் உரிமைகளை வேண்டிய தமிழ்தேசிய கோரிக்கைகளுடனான ஆயுதப்போராட்டமானது மௌனித்துப்போய் கிட்டத்தட்ட  10 வருடங்கள் கடந்து போயுள்ள நிலையில் அரசியல் ரீதியான வழிமுறைகளே இறுதியானது என்ற முடிவுக்குள் வந்துள்ள தமிழினமானது 2009 இன் பின்னர் இரண்டு பாராளுமன்றத்தேர்தல்களை சந்தித்துள்ள போதிலும் கூட தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான எந்த தீர்வுககளும் இது வரையில் கிடைத்திருக்கவில்லை. அதன் தொடர்ச்சியான மூன்றாவதும் தீர்க்கமானதுமான தேர்தல் முடிவுகளில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கணிசமான மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. அதாவது 2010 தொடங்கியது முதல் தேசியம்/ தமிழர் தாயகம் என்ற விடயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழ்மக்களுடைய முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இதுவரை காணப்பட்ட வாக்கு வங்கி சரி அரைவாசிக்கு குறைவடைந்துள்ளதுடன் வடக்கு – கிழக்கு இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சிதறல் அதிகரித்துள்ளதுடன் மக்களில் கணிசமான தொகையினர்  பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை  மையப்படுத்திய அரசாங்கத்துடன் சார்ந்த  அரசியல் கட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளமையும் துலாம்பரமாக வெளிப்படக் காணலாம். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு மனோநிலை,  தமிழர் அரசியல் தொடர்பாக காணப்படும் வெறுமை , மக்களுடைய மனநிலை போன்ற விடயங்கள் நன்கு ஆராயப்பட வேண்டியனவாகும்.
2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுடைய அரசியல் சார் அபிலாசைகளை காவிச்சென்ற அல்லது செல்லக்கூடிய ஒரு அமைப்பாக மக்களின் ஒரே தெரிவாக காணப்பட்டது இலங்கை தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாராளுமன்ற தேர்தல்களாகட்டும், ஜனாதிபதி தேர்தலாகட்டும், மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்கள் 2009 முதல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கே பெரும்பாலும் கட்டுப்பட்டோராக காணப்பட்டனர். எனினும் 2020 தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆகப்பெரிய பின்னடைவுக்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்ளுதல் தலையாயது. கடந்து முடிந்த ஒரு தசாப்பத காலத்தில் தமிழ்  மக்கள் அதிகம் விரும்பிய நம்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களினால் தமிழ்மக்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு எது விதமான ஆரோக்கியமான முடிவுகளையும் எட்ட முடியவில்லை என்ற விரக்தியான மனநிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே ஆகப்பெரிய அபத்தமாகும். இந்த நிலையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதான வெறுப்புணர்வும் தமிழர்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக நல்லாட்சி அரசினை பாதுகாக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அதிக பிரயத்தனம் மேற்கொண்ட அளவிற்கு கூட தமிழர் பிரச்சினைகளில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை. இராணுவமயப்படுத்தலிலுள்ள தமிழர் காணிகளை விடுவிப்பதிலோ அல்லது சிங்கள மயப்படுத்தப்பட்ட / சிங்கள மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் பகுதிகளை மீட்பதிலோ பெரியளவிலான அக்கறை காட்டமை, தமிழ்தேசிய நீக்க அரசியலை கையிலெடுத்தமை, சுமந்திரனை மையப்படுத்திய அரசியல் போக்கை கடைப்பிடித்தமை , அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றகரமான திட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்காமை,  வேலையில்லா பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தாமை, வலிந்து காணாமலாக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அலட்டிக்கொள்ளாமை என பல காரணங்களிடைப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு இன்னும் தீவிரமாகியதே தவிர குறைந்தபாடில்லை.
இந்த அடிப்படையிலாக கூட்டமைப்பின் மீதான ஒரு வெறுப்பான மனோநிலை மக்களை அதற்கு மாற்றீடான புதிய கட்சிகளின் பக்கம் சாரவும்,  அபிவிருத்தியை நோக்கி மக்கள் சிந்தனை நகரவும் காரணமானது. இந்த ஒரு புள்ளியிலிருந்தே 2020 பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்திருந்தன.  தமிழ்தேசிய கூட்டமைபின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு மனோநிலை தமிழ்தேசியம் பேசிய அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி மீதும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீதும் ஒரு தொகுதி மக்களுடைய பார்வை திரும்ப காரணமானது. அது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கிய மக்களுடைய பார்வை அரசுடன் இணைந்து பயணிக்க கூடிய தலைவர்கள் மூலமாகவே அது கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வடக்கு – கிழக்கில் அரசுடன் இணையவுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுடைய வாக்குகள் ஒருங்கு சேர காரணமானது. இந்த வகை கட்சிகளான ஈ.பி.டி.பி,  அங்கஜனை முதன்மை வேட்பாளாராக கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகள் பெற்ற  முழுமையான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு கிட்டியதாக உள்ளது யாழ் தேர்தல் தொகுதியில் மட்டும். அதுபோல வடக்கு கிழக்கில் பொதுஜன  பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கடசி, ஈ.பி.டீ.பி,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பனவற்றுக்கு  கிடைத்துள்ள ஆசனங்கள் என எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட 17 ஆசனங்களாகும். இது  வடகிழக்கில் கூட்டமைப்பின் ஆசனங்களை விட   அதிகமாகும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சிதறுண்ட ஆசனங்கள் யாவுமே முழுமையாக தமிழ்மக்கள் தங்களுடைய தலைமைக்கட்சியாக எண்ணிய  தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய கடந்தகால  தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளாலும் தமிழர் தலைமைகளிடையே காணப்பட்ட  ஒற்றுமையீனத்தாலும் அரசியல்தீர்வு , பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு தளங்களிலும் 2009ன் பின்னரான அடைவுமட்டங்களில் மாற்றங்களின்மையாலும்    மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையினுடைய வெளிப்பாடே  என்பதை தமிழ்தேசியம் பேசும் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால நல்லாட்சி அரசில் பெற முடியாத எதனையும் இன்றைய பொதுஜன பெரமுனபாராளுமன்றில் அல்லது ஆட்சியில் நினைத்தும் பார்க்க முடியாது. ஏனெனில் பொதுஜன பெரமுன எனும் ராஜபக்சக்களின் கட்டமைப்பில் தீவிர சிங்கள மக்களின் வாக்குகளே அதிகம் குவிந்துள்ளமையால் இந்த அரசில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நினைத்துப்பார்ப்பதென்பது குதிரைக்கொம்பு போன்றதே. இது ஒரு புறமிருக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த கோட்டபாய ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப்பிரதமர் மோடி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை பற்றி பேசிய போது தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் எவையுமேயில்லை. தீர்க்கப்பட வேண்டிய பொருளாதார அபிவிருத்தி சார் நடவடிக்கைகளே உள்ளன எனக்குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.  இவ்வாறான ஒரு அரசிடம் இருந்து தமிழரின் அரசியல் சார் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக முழுமுயற்சியுடன் செயற்பட வேண்டிய தேவை தமிழ்தேசியம் பேசிய பாராளுமன்ற தலைவர்களிடம் காணப்படுவதுடன் சர்வதேசத்திற்கும் எங்களுடைய பிரச்சினைகளை இடித்துரைக்க வேண்டிய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இவர்கள் என்பதையும் புரிந்து செயலாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,  சி.வி விக்னேஸ்வரன் போன்றோரை இணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தார். இது எந்தளவு தூரம் அகவயமானது என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.
வடக்கை பொறுத்த வரை அங்கஜனுக்கு கிடைத்த ஒரு ஆசனம் ஈ.பி.டி.பிக்கு கிடைத்த இரு ஆசனங்கள், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்திக்கு வன்னியில் கிடைத்த தலா ஒரு ஆசனங்கள் அபிவிருத்திக்காக கிடத்த ஆசனம் என ஒரு விதமாக கூறப்பட்டாலும் கூட யாழில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு கிடைத்த  ஆசனங்கள் தமிழ்தேசியகொள்கைக்கு கிடைத்த ஆசனங்களேயாகும் . இதே நேரத்தில் தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் பொருளாதார மேம்பாடு பற்றி  பேசாமையை காரணம் காட்டியே அங்கஜன் அவர்களுடைய வாக்கு வங்கி நிரப்பப்பட்டது. அது போல வன்னி தேர்தல் தொகுதியை பொருத்த மட்டில் தமிழ்தேசிய தலைவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையில்லாத நிலையே வன்னி வாக்குச்சிதைவுக்கு காரணமானது.  அது மட்டுமன்றி தமிழ் மக்கள்  தேசிய கூட்டணிக்கு வன்னி தேர்தல் தொகுதியில் பெரிய பரீட்சையமின்மையால் சிவசக்தி ஆனந்தனுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த ஆசனம் இந்த தடவை இல்லாது போனது. இந்த அடிப்படையிலே ஈ.பி.டி.பி கட்சிக்கான ஒரு ஆசனம் வன்னியில் பங்கிடப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற  தலைமைகளிடம் பெரிய பொறுப்பு ஒன்று காணப்படுவதை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுகளை மையப்படுத்தி நகர்வது தமிழர்கள் பொருட்டு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணங்கள். அதற்காகவும் சேர்த்து இனிமேல் செயற்ப்பட வேண்டும்.
அடுத்ததாக கிழக்கின் நிலை பற்றியும் அதீத கவனம் செலுத்த வேண்டிள்ளது.கடந்த கால நல்லாட்சி அரசிலும் சரி அதற்கு முற்பட்ட காலம் 2010இல் இருந்தே நாம் படிப்படியாக இழக்க தொடங்கி விட்ட ஒரு பகுதியாக கிழக்கு உள்ளது. குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகளின் படி மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமே கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அம்பாறையில் காணப்பட்ட நிலையை விடஇந்த தடவை மிக மோசமானதாகவே உள்ளது.  அம்பாறையில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற மொத்தமான வாக்குககள் 1,29,012 ஆக காணப்பட கூட்டமைப்பு வெறுமனே 25,255 வாக்குகளையே பெற்றது. மேலும் அம்பாறையில் இருந்த ஒரு நேரடி தமிழ்கட்சியின் கடந்த கால ஆசனமும் பறிபோயுள்ளது என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறமிருக்க திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கூட்டமைப்பால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தமை கிழக்கில் தமிழர்தாயகம் என்ற நிலைக்கு விழுந்த மிகப்பெரிய சறுக்கலேயாகும். இதுதவிர மட்டக்களப்பில் நான்கு ஆசனங்கள் தமிழருடைய ஆசனங்கள் எனக்குறிப்பிட்டு மார்தட்டிக்கொள்ளும் போதிலும் கூட சாணக்யாராஹுல் கடந்த காலங்களில் அரசுதரப்பு கட்சிகளுடன் பயணித்து இந்த தேர்தலில் கூட்டமைப்பில் நின்று வெற்றிபெற்றுள்ளார். பிள்ளையான் மற்றும்  வியாழேந்திரன் ஆகியோருடைய ஆசனங்கள்  அரசினுடைய கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு போக்கிலேயே அமைந்து கொள்ளும் என்பதில் எந்த ஒரு கேள்விக்குமிடமில்லை. இந்த நிலையிலேயே நாம் கிழக்கினுடைய நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஏற்கனவே கன்னியா உள்ளிட்ட பிரதேசங்களில் பௌத்தமயப்படுத்தல் வேகமாக உருவெடுத்து கடந்த காலங்களில் பல இடர்பாடுகளை தோற்றுவித்துள்ளது. அதே நேரம் வேகமாக கிழக்கு தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் கூட தொல்லியல் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர் வரலாற்று பகுதிகள் யாவுமே சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைககள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன. இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மட்டுமே கையில் கிடைத்திருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. எனினும் அதனை முழுமையாக  தவறவிட்டிருக்கிறோம் என்பதே நிஜமும் கூட.
இந்த நிலையிலேயே தமிழர் தாயகம் என்ற நிலையில் நாம் கூறிக்கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கின் எதிர்கால நிலை பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம். உண்மையில் வடக்கில் குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான ஐந்து ஆசனங்கள்  என்ற நிலை மாற்றமடைந்து தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் மூன்றிற்கான ஆசனங்கள் ஐந்து என்ற நிலையே தோற்றம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் கூட்டமைப்பினுடைய நகர்வுகளில் இனிவரும் நாட்களில் பெரியளவிற்கான மாற்றங்கள் அல்லது சிறப்பான அரசியலை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டுரையாளர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது  பல்வேறுபட்ட அரசியல் அவதானிப்பாளர்களும் கூட்டமைப்பினுடைய  தேசியப்பட்டியலினை பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய இருப்புக்கான ஒருவரை தெரிவு செய்ய முனைய வேண்டும் என கேட்கப்பட்ட போதிலும் கூட அந்த  தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தொடர்பான ஒரு விதமான இழுபறி நிலையே தொடரந்து வருகின்றது. இந்த அடிப்படையில் ஒரு தூரநோக்கற்ற நகர்வுகளே இனியும் தொடருமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பு காலவோட்டத்தில் இல்லாமலேயே போய்விடும் என்பது கண்கூடு. அதுபோல அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய நகர்வுகள் தனித்து யாழ்ப்பாணத்திற்குள் மட்டுமே முடங்கி காணப்படுவதால் அது தன்னுடைய கட்சிக்கான மக்கள் அபிப்பிராயத்தை பெறவும் கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் இழந்துபோயுள்ள ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள அம்பாறையை சேர்ந்த ஒருவருக்கு அது வழங்கப்பட வேண்டும் என பல அரசியல் ஆர்வலர்களாலும்  வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தமிழ்தேசியம் தமிழர் தாயகம் போன்ற விடயங்களை வெளிப்படையாக பேசிக்கொண்டேயிருந்தாலும் கூட நம்மிடையே ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கூட்டம்   என்ற ரீதியிலான ஒரு நிலைப்பாடே இந்த பாராளுமன்ற தேர்தலின் முழுமையான பின்னடைவுக்கான காரணமாகும். இந்த தேர்தலில் தமிழர் தலைமைகள் நிலையை உணர்ந்து ஒரு மித்த குரலாக இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் நிலை மாறியதே வடக்கு கிழக்கில் புதிய சக்தியான பெரமுனவும்,  ஐக்கியமக்கள் சக்தியும் கனிசமான ஆசனங்களை பெற காரணமாயமைந்ததது. இது தவிர பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை சிங்கள மக்களினுடைய முழுமையான ஆதரவுகளுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட நிலையில் தமிழ்தேசிய அரசியல் பரப்பின் முக்கியமான ஆளுமைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே பெரமுன போன்ற பெருங்கட்சிகளை எதிர்த்து நிற்க போதுமான வீரியத்தை எமக்கு வழங்கியிருக்கும். ஆனால் தமிழ்த்தலைவர்கள் மூன்றுகட்சிகளாக பிரிந்து மேலும் பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டனர் என்பதே உண்மை.
கடந்த காலத்தவறுகளை சுட்டிக்காட்டுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது எதிர்காலத்துக்கான நகர்வுகள் பற்றிய முன்னாயத்தங்களாகும். தற்போதைய பாராளுமன்றில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்க கூடிய கட்சிகளின்  13 அங்கத்தவர்களே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு அசைவும் தீர்க்கமானதாகவும் தமிழருடைய எதிர்கால அரசியல் இருப்பு,  பொருளாதார , அபிவிருத்தி நலன்களையும்  மையப்படுத்தியதாக காணப்படுவதுடன் கடந்த காலத்தில் விடப்பட்டதான தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அமைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது மட்டுமே இழந்து போன வடக்கு – கிழக்கு மக்களுடைய அபிப்பிராயத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் தமிழ்தேசியம் என்ற கொள்கையை உயிர்ப்புநிலையிலும் வைத்திருக்க முடியும்.  வடக்கு – கிழக்கு பகுதிகள் இணைந்ததமிழர் தாயகம் என்ற நிலையே நம்முடைய வரலாற்று இருப்பை தொடர்ந்தும் பேண அவசியமானது என்பதை இந்த தமிழர் தலைமைகள் உணர்ந்து செயற்டவேண்டியவர்களாகவுள்ளனர். இந்தத்தேர்தல் முடிவுகளில் இருந்து எவ்வளவு பாடங்களை நம்முடைய அரசியல் தலைமைகள் கற்றுக்கொள்கின்றனரோ..? அவ்வளவுக்கு தமிழர் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த தமிழர்தலைமைகள் ஒற்றுமையுடன் பயணிக்கும் போது மட்டுமே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ள பொதுஜன பெரபமுன பாராளுமன்றில் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓரளவாவது ஓரளவாவது புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அல்லாது விடின் வழமை போல ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய கொள்கைகளை மட்டுமே இறுகப் பிடித்து வழமை போல பிரிவினை பாராட்டி வருவார்களாயின் எஞ்சியுள்ள மக்கள் ஆதரவையும் இழந்து , வருகின்ற காலங்களில் பெரும்பான்மை வாதத்துக்குள் அல்லது ராஜபக்சக்களின் இலங்கைக்குள் நம்முடைய அடையாளத்தை இழந்து வரலாற்றை தொலைத்து பயணிக்கப்போகின்ற அவலமான ஒரு நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நமது தமிழர் தலைமைகள் ஒருபுறத்தில் சர்வதேசத்திற்கு தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டியவர்களாகவும், மறுபுறத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியேறிய பொதுஜனபெரமுன பாராளுமன்றில் தமிழர்களின் தனிக்குரலாக ஒலிக்க வேண்டியவர்களாகவும் , பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டியோராகவும் காணப்படுகின்றனர்.மிகப்பிரதானமாக மேற்குறிப்பிட்ட மூன்று விதங்களில் கடமையாற்ற வேண்டிய நமது தலைமைகள் அடுத்த 05 வருடங்களுக்கு  என்ன செய்யப்போகின்றனர்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *