தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *