எந்த தீர்வும் இல்லாமல் நகரும் காணாமலாக்கப்பட்டோருக்கான உறவினர் போராட்டம் – மேலும் ஒரு தாய் மரணம்!

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்த காலத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படடவர்கள் என பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு மூன்றாம் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1250 வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10.08.2020) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மகனை தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இந்த தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த பல உறவுகள் உயிரிழந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *