கட்டுப்படுவதற்கான எந்த சாத்தியக்கூறுகளுமே இல்லாது கொரோனா பரவல் நாளுக்குநாள் உலகம் எங்கும் வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக சுமார் 10 லட்சத்தை கடந்துள்ளதாக தொழிலாளர் புள்ளி விவரத் தலைவர் ஜோர்ன் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோர்ன் ஜார்விஸ் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் கொரோனாவைரஸ் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவு முதல்முறையாக 10 லட்சம் பேர்வரை கரோனாவால் வேலை இழப்பை சந்தித்துள்ளன. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 22,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.352பேர் பலியாகி உள்ளனர்.