சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மகேந்திர சிங் டோனி !

தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர் மகேந்திர சிங் டோனி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் டோனி விளையாடவுள்ளார். இதற்கான பயிற்சி முகாமில் பங்குபெற தற்போது சென்னை வந்துள்ளார் தோனி.

இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திர சிங் டோனி காணொளி ஒன்றைப் நேற்றையதினம் பகிர்ந்துள்ளார். அதோடு, “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் டோனி அறிவித்திருந்தார். விராட் கோலி அணிக்கு தலைமையேற்ற சமயத்திலிருந்தே தோனியின் ஓய்வு குறித்துப் பல முறை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மகேந்திர சிங் டோனி அறிவித்துள்ள ஓய்வும், வெறும் ஒரு நாள் போட்டிகளிலிருந்தா இல்லை டி.20 போட்டிகளுக்கும் சேர்த்தா என்பது குறித்துத் தெளிவில்லை. விரைவில் இது குறித்த விரிவான அறிக்கையை மகேந்திர சிங் டோனி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பலர் சமூக ஊடகங்களில் இது குறித்துப் பகிர்ந்து, விவாதித்து வருகின்றனர்.

ஊடக யூகங்கள் இல்லை, வழக்கமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை, பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை, பிரம்மாண்டமாக, விடைபெறுவதற்கென எந்த ஆட்டமும் இல்லை, இறுதி உரை எதுவுமில்லை, (அறிவிப்பு வரும் வரை) யாருக்கும் இது பற்றிய ஒரு யோசனையும் இல்லை, அழகான இந்திப் பாடலுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு காணொலியுடன் அறிவித்துள்ளதைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படியொரு ஓய்வை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் அறிவித்ததில்லை எனவும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *