இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி நாளை (20.08.2020)(வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி இடம்பெறும் முலாவது நாடாளுமன்ற அமர்வாக நாளைய அமர்வு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதற்பாராளுன்றில் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியுடன் தொடங்கி ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தல்களிலும் கணிசமானளவு பிரதிநிதிகள் இக்கட்சி மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை
எவ்வாறிருப்பினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஒருவருக்கு வாய்ப்பு காணப்பட்டது.
எனினும் பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் இதற்கான தீர்வினைக் காண எதிர்பார்த்துள்ளதாகவும் இறுதி தீர்மானம் எடுத்ததன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஸ்திரமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.