நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பினால் சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கெரவலப்பிட்டிய மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் சுமார் எட்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நாடாளவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாகவே சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேற்று முன்தினம் மாத்திரம், சுமார் ஆயிரத்து 200 மெகாவோட்ஸ் மின்சாரம் தடைப்பப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மின்சார சபையின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “பழுதடைந்துள்ள இயந்திரங்களை சீர் செய்வதற்கு சுமார் 9 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் அதன் தாக்கம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று இயந்திரங்கள் செயழிலந்து காணப்படுகின்றது. அவற்றை சீர் செய்வதற்கு 9 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.
எனினும் அதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே அரசாங்கம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.