பொலிஸ் இராச்சியம் உருவாகி வருவதாக கடுமையாக சாடுகிறது ஐ.தே.க.

check1.jpgபொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சில உயர்மட்டங்கள் அரசாங்கத்தின் கையாட்களாகச் செயற்பட்டு வருவதாகவும், நடப்பவற்றைப்பார்க்கும்போது நாட்டில் பொலிஸ் இராச்சியமொன்று உருவாகி வருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் கடுமையாக சாடியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, சில பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சர்வாதிகார ஆட்சியொன்று நடப்பதாகவே எண்ண வேண்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ தேர்தல் தொகுதியில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனக்கு கீழிருக்கும் பொலிஸாரை பயன்படுத்தி எதிர்க்கட்சித்தரப்பினர் மீது பழிவாங்கும் முயற்சியிலீடுபட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் மொரட்டுவ பிரதான அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; மொரட்டுவ தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும், கட்அவுட்களும் நகரம் பூராவும் காணப்படுகின்றன. ஆளும்தரப்பினரின் கட்அவுட்கள் வீதியின் இரு மருங்குகளிலும் அணிஅணியாக போடப்பட்டுள்ளன. அவை குறித்து பொலிஸார் கண்டு கொள்ளவில்லை. இத்தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரான எனது கட்அவுட்கள் சில கரையோரமாக உள்ள வீதியிலேயே போடப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வந்து எனது கட்அவுட்களை உடைத்தெறிந்து விட்டுச் சென்றார். 119 பொலிஸ் வாகனத்திலேயே இவர்கள் வந்து இக்காரியத்தைச் செய்தனர். ஏனைய கட்அவுட்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தால் அதனை நியாயமானதாகக் கருதமுடியும். அரச தரப்பு பெரும்புள்ளிகளின் சுவரொட்டிகளையும், கட்அவுட்களையும் பாதுகாத்துக் கொண்டு எதிரணியினர் மீது பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு நடப்பது பக்கச்சார்பானதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

இந்தப் பொலிஸ் அதிகாரி சம்பவம் நடந்த நாளன்று விடுமுறையில் இருந்தவராவார். லீவிலிருந்த அவர் பொலிஸ் சீருடையுடன் வந்து இக்காரியத்தை செய்ததன் மூலம் அரச தரப்பு பெரும் புள்ளிகளின் ஆதரவோடுதான் செய்திருக்கின்றார் என்பது புலனாகிறது. பொலிஸ் அதிகாரிகள் சகலருக்கும் ஒரேவிதமாக நடக்க வேண்டியவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடக்க முற்படக்கூடாது. அண்மைக்காலமாக பொலிஸ் திணைக்களம் தவறான வழியில் நடக்க முற்படுவதைக்காணக்கூடியதாக உள்ளது. அரசுக்கு சார்பாக நடப்பது மட்டுமன்றி எதிரணியினர் மீது கடும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் உயர்மட்டத்தினர் பலரும் அரசின் அடிவருடிகளாகச் செயற்பட்டுவருகின்றனர். நாட்டில் இன்று பொலிஸ் இராச்சியமொன்று நடப்பதாக காண முடிகிறது. இதற்கு ஜனநாயக நாட்டில் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயங்கிப் போவதில்லை. சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை இட்டுச் செல்வதற்கு பொலிஸாரும் துணை போவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *