யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ.போ.ச பஸ்ஸிலும் செல்லக்கூடிய நிலையை உருவாக்குவேன் – ஜனாதிபதி –

mahinda.jpg
யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ. போ. ச. பஸ்களிலும் பயணிக்கக் கூடிய நிலையை இவ்வருடத்தில் உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்கள் மட்டுமன்றி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தலைவர்களும் இவ்வாறு பயணிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பான சூழ்நிலையும் நிலவு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இ. போ. ச. வின் ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் நேரடி பஸ் சேவைகள் இருந்தன. இது வடக்கு – தெற்கு நட்புறவைப் பலப்படுத்தியிருந்தது. இந்நிலை இன்று மாறிவிட்டது. மீண்டும் அந்த நிலை உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் துரையப்பாவைக் கொலை செய்த மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகள் போக்குவரத்தைக் குழப்பினர். அன்றுள்ள அரசாங்கமோ அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் தெற்கிலிருந்து வடக்கிற்கான பஸ் சேவையையும் யாழ். தேவி ரயில் சேவையையும் கூட நிறுத்தியது. இதுதான் அன்றைய நிலை. நான் பாடசாலைக்கு இ. போ. ச. பஸ்ஸில் பயணித்தவன். கடந்த காலங்களில் இரவில் தனியார் போக்குவரத்துக்கள் இருந்ததில்லை. இரவுப் பயணங்களை மக்கள் இ. போ. ச. பஸ்களிலேயே மேற்கொண்டனர். இதனை சீர்குலைக் கும் வகையில் இரவு 6 மணிக்கு மேல் பஸ் சேவையை நிறுத்திய காலமொன்றும் இருந்தது.

இ. போ. ச. மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு காலத்தில் எஸ். எஸ். சி. படித்த இளைஞர்கள் இ. போ. ச. நடத்துநர்களாக வருவதற்கு பிரயத்தனப்பட்டனர். ஏனெனில் அன்று அத்தொழிலுக்குப் பெரும் மவுசு இருந்தது. அவர்களுக்குப் பெண் கொடுப்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்த காலமது.

இத்தகைய மக்களுக்கு நெருக்கமான இ. போ. ச., ச. தொ. ச. போன்றவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்கள் தனியாருக்கு விற்றனர். மக்கள் ஒரு போதும் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால்தான் இ. போ. ச. வை மீள ஸ்தாபிக்கும் உணர்வு மக்களிடம் எழுந்தது. அரசாங்கம் அதனை நிறைவேற்றியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *