இந்திய, பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரு நாடுகளிடையேயும் மூண்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு தொடர்புகளை ஏற்படுத்திக் கொணடனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட போர்ப் பீதியால் இந்திய, பாகிஸ்தான் பிரஜைகளிடையே அச்சம் எழுந்தது. இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் காரசார மான அறிக்கைகளையும் வெளியிட்டன. இராணுவங்கள் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டதால் இந்திய சென்ற பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு வந்த இந்தியர் களும், அவசர அவசரமாகப் பயணங்களைப் பாதியில் நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பினர். அணு ஆயுதங்களையுடைய இரண்டு நாடுகளையும் சமாதானமுறையில் செல்லுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்கள் வழங்கியுள்ள நிலையில் இராணுவ உயரதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தியமை பதற்றத்தைத் தணிக்க உதவியுள்ளது.
படைகள் இரு எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் போரைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ள இராணுவ ஆய்வாளர்கள் படைகள் விலக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தால் படைவிலக்கல் பற்றி பேசப்படலாம்.