பங்களாதேஷில் வெளியான தேர்தல் முடிவுகளை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா நிராகரித்துள்ளார். வாக்களிப்பின் போது நாடு பூராவுமுள்ள பல வாக்களிப்பு நிலையங்களில் ஒழுங்கீனங்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் ஷியா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் ஷியாவின் அரசியல் எதிரியும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசினா அமோக வெற்றி பெற்றிருந்த அதேவேளை இத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டதாக ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் என்பன பாராட்டியிருந்தன.
இரண்டு வருட இராணுவ ஆதரவுடனான ஆட்சிக்குப் பின்னர் இத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல் தடவையாக கருத்துத் தெரிவித்த ஷியா, தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்முடிவுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ஷியா ஒழுங்கீனங்கள் நடைபெற்றமைக்கான விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த சில தினங்களில் இவற்றை ஊடகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவோமெனத் தெரிவித்துள்ளார். சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக ஷியாவின் கட்சி முறையிட்டுள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா அல்லது வன்முறைகளை தோற்றுவிக்கின்றதா என்பதை அறிவதற்கு அடுத்த இரு தினங்களும் மிகவும் முக்கியமானவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் 260 இற்கும் அதிகமான ஆசனங்களை மற்றைய முன்னாள் பிரதமரான ஷேய்க் ஹசினா வென்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் இதுவரை உத்தியோக பூர்வமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிடவில்லை.