முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இந்த ஆண்டை எதிர்கொள்ள விளையும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்க முடியாதென்பதால் சிறுபான்மையினர் மீதான அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காகவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வை முன்வைக்கவும் இந்நாட்டுத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் உழைக்க வேண்டுமென யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்ற ஆண்டிலே நாட்டிலே பொருளாதார நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றையும் விட வன்னிப் பிரதேசங்களை கைப்பற்ற அரசினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் உயிர் இழப்பும், ஆயிரக்கணக்கான மக்களின் இடம்பெயர்வுகளையும் சந்தித்தோம். வன்னிப் பிரதேசமும், குடாநாடும், விமானக் குண்டுத் தாக்குதலினாலும், அகோர எறிகணைகளின் சத்தத்தினாலும் அதிர்ந்தது. இக்கொடிய போரைநிறுத்தி அமைதியை கொண்டு வர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படியாக பிற நாடுகளிடமும், அயல் நாடான இந்தியாவிடமும் இருந்து குரல்கள் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டன.
எமது பரிசுத்த தந்தை 16 ஆவது பெனடிக்ற், இலங்கை ஜனாதிபதி அவரை சந்திக்க சென்ற போது போரை நிறுத்தும்படியாகவும், அமைதிக்காக உழைக்கவும் வலியுறுத்தினார். ஆனால், போர் இன்னும் உக்கிரமடைந்து, இடம்பெயர்ந்த மக்களின் துன்பங்கள் இரட்டிப்பாகின. நத்தார் காலத்தில் அமைதிக்கான போர்நிறுத்தங்களை கடைப்பிடிக்க ஆயர்கள் விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. 50 வருடங்களின் பின் கொட்டும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு யாழ்.குடாநாட்டு மக்களை மேலும் வெகுவாக பாதித்தது.
முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இவ்வாண்டை எதிர்கொள்ள விளையும் போது பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்கவே முடியாது. இந்நாட்டு தலைவர்களும், பிறநாட்டு தூதுவர்களும் சிறுபான்மையினர் மீது நடந்தேறும் அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காக உழைக்கவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான நிரந்தர தீர்வை எதிர்பார்க்கின்றோம். எல்லா மக்களும் யுத்தம் இன்றி மனித உரிமைகள் பேணப்பட்டு சுபீட்சமான வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்துக்கொள்கின்றேன்.