பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஒருமித்து இந்தக் கருமத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் நீடிக்கவில்லை. கடந்த ஆட்சியில் அந்தப் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும் கூட இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை.
ஆனால், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அவருடைய கட்சி இருக்கின்றது.
அவர் நேர்மையாகச் செயற்பட்டு நாட்டினுடைய முன்னேற்றத்துக்கும் நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களது முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று நாம் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ‘மஹிந்த அரசுடன் சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமா?’ என்று சம்பந்தனிடம் கேட்டபோது, இப்போது அதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை சம்பந்தன் என தெரிவித்துள்ளார்.