யாழ்ப்பாண மக்கள் இலவசமாக உணவு பெற்று உண்பதை விரும்பாதவர்கள். அவர்கள் சுயமாக உழை த்து உண்பதிலேயே நாட்டம் கொண்டவர்களென்று அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் லியனாராச்சி தெரிவித்தார். யாழ். மக்கள் தமது விவசாயத்தை மேம்படுத்திக் கொள்வதற்கென கூடுதலாக உரத்தையே பெற்றுத் தருமாறு கேட்கிறார்கள் என்று தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்துக்கு உணவு தவிர்ந்த மரக்கறி வகைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
கப்பலில் மரக்கறிகளை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் உணவுக்குத் தட்டுப்பாடு கிடையாது என்று தெரிவித்த அவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 1600 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது மின்சாரத் துண்டிப்பு 15, 30 நிமிடங்கள், மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.