மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்தார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பிள்ளையான் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
இதனையடுத்து, தற்போது இடம்பெற்று வரும் 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்ற பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் தான் 5 வருடங்கள் சிறை வாசம் அனுபவிப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.
தான் சிறையில் உள்ளமையினால் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவம் குறிப்பிட்டார்.