விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதரதமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது;
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுகளை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுகளை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம்.
கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.
அனைத்துக் கட்சிக்குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகின்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக்கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் தொடர்பாடல்கள் நல்ல முறையில் உள்ளபோதும் வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். வடபகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஐ.நா.சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமைகளை அறிய அரசாங்கம் உதவ வேண்டும்.