அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 191 படையினர் பலி, 247 பேர் காயம் – விடுதலைப்புலிகள் தெரிவிப்பு

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 191 படையினர் கொல்லப்பட்டும் 247 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக இணையத்தளத்தில் புலிகள் தெரிவித்திருப்பதாவது; தமிழரின் தாயக பூமியை இன்று ஆக்கிரமித்து நிற்கும் இலங்கைப் படைகள் தமிழரிடமிருந்து புலிகளை பிரித்துவிட்டதாகவும், கிழக்கிலிருந்து புலிகளை விரட்டியடித்து விட்டதாகவும் நாள்தோறும் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பது எம்மக்களுக்கு தெரியும்.

தந்திரோபாய ரீதியிலான சில பின்நகர்வுகளை கிழக்கில் நாம் மேற்கொண்டாலும் படையினருக்கு எதிராகவும் இனத்துரோகிகளுக்கு எதிராகவும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் படையினருக்கு எதிராக பல தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. கடந்த 01.01.2008 தொடக்கம் 31.12.2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த படையினரது மொத்த எண்ணிக்கையை இந்த வேளையில் நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கையை பார்ப்போம். கொல்லப்பட்ட விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 123, இராணுவத்தினரது எண்ணிக்கை 35, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை 15, பொலிஸாரின் எண்ணிக்கை 18, கொல்லப்பட்ட ஆயுதக்குழுக்களின் எண்ணிக்கை 07 ஆகும். இவ்வாறு உயிரிழந்த ஆயுதக்குழு தவிர்ந்த 191 படையினரில் 13 படையினர் புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில், காயமடைந்த படைத்தரப்பின் எண்ணிக்கையை பார்த்தால், காயமடைந்த விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 192, இராணுவத்தினரது எண்ணிக்கை 44, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை05, பொலிஸாரின் எண்ணிக்கை 06, காயமடைந்த ஆயுக் குழுவினரது எண்ணிக்கை 05 ஆகும். புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் 09 படையினர் படுகாயமடைந்துள்ளதோடு, காயமடைந்த 247 படையினரில் 72 பேர் போர்முனைக்கு மீண்டும் செல்ல முடியாதவாறு தமது உடல் அவயங்களை இழந்துள்ளனர். இக்காலப்பகுதியில் படையினருடனான மோதல்களின் போது 23 போராளிகள் தமது இன்னுயிர்களை இம்மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். 13 போராளிகள் விழுப்புண் அடைந்துமுள்ளனர்மேலும், 2008 ஆம் ஆண்டில் எமது மக்கள் பல இன்னல்களையும் வேதனைகளையும் சந்தித்த ஆண்டாகவே இந்த ஆண்டு இருந்தது. படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக தமது சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதி வாழ்வு வாழ வேண்டிய நிர்க்கதிக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் இந்த வேளையிலே 2009 எனும் புதிய ஆண்டு எம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஆண்டாகவும், நிம்மதியான வாழ்வை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும். தமிழீழ தேசத்தின் விடிவுக்காக களமாடி தம் இன்னுயிர்களை இம் மண்ணுக்காக தந்த மாவீரர்களின் கனவு நனவாகும் ஆண்டாகவும் 2009 ஆம் ஆண்டு அமைய வேண்டும்என்ற எதிர்பார்ப்பு எம்மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த வேளையில், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கடந்த ஆண்டுகளைப் போல் இப்புதிய ஆண்டிலும் தமிழீழ தேசத்தின் விடியலுக்காக எல்லா வகையிலுமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நீங்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் சேனையின் கரங்களை பலப்படுத்தும் உங்களது செயற்பாடுகள் தான் எமது மண்ணின் விடுதலையை விரைவுபடுத்தும் என்பதனை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *