கிழக்கு மாகாண பாடசாலைகளில் சென்.ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதலுதவிப் பயிற்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமது பிரதேசத்திலும் பாடசாலை சூழலிலும் திடீர் அனர்த்தம் மற்றும் விபத்துகள் ஏற்படும் வேளையில் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டுதல் தொடர்பாகவும் செய்முறை பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த கால யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மாணவர்கள் மத்தியில் முதலுதவி சம்பந்தமான போதிய அறிவு இல்லாததினால் விலை மதிப்புள்ள பெறுமதி வாய்ந்த மக்களின் உயிர்கள் பறிபோயின. சரியான தருணத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அதிகமான மக்களை உயிர் இழப்புகளிலிருந்து பாதுகாத்திருக்க முடியும். கிழக்கு மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களிலும் வலய மட்டத்தில் முதலுதவி பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்து பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.