பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *