9ஆவது நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையினை இதன்போது நிகழ்த்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு நன்றி.
புராதன பௌத்த உரிமையைக் காப்பாற்றுவதற்கு முழு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் மத உரிமையை காப்பாற்றுவதற்கு பௌத்த மதகுருமார்களின் அறிவுரைகளை கேட்டு வருகிறேன். அதற்கான அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய உரிமை, கிராமிய கலை தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. மேலும் போதைப்பொருள், பாதாள உலகக் குழுவிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியையும் தொடங்கியுள்ளேன்.
உள்நாட்டு உற்பத்தியை வலுவடையச் செய்துள்ளேன். அதனை மெய்பிக்கும் வகையில் தேசிய விவசாயிகளுக்கு இலவச உரம், பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிவகைகள், கடன் உதவித் திட்டங்கள், குறைந்த வட்டிவீதங்கள் என்பவற்றை அமுல்படுத்தியுள்ளளேன்.
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தபோது மக்களின் அடிப்படைப் பிரச்சினையாக வீடு இல்லாமை காணி பத்திரம் இல்லாமை போன்ற பிரச்சினைகளையே பெரும்பாலானோர் முன்வைத்தனர்.
சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும் நிறைவடையாத இந்த காணிப்பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்பட்டு காணிப்பத்திரம் வழங்கப்படும்.
மேலும் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளமை யானைகளின் தொல்லைகளால் மக்கள் படும் சிரமங்களே. இந்த நிலையில், இதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு இந்த பிரச்சினை தீர்க்கப்படும். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் நீர் விநியோகப் பிரச்சினை தீர்க்கப்படும்.
பெற்றோரின் எதிர்பார்ப்பாக தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, தரம் வாய்ந்த பாடசாலை என்பனவே உள்ளன. ஆனால் நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, நூலகம் மற்றும் மைதானம் இல்லாமை போன்ற பல குறைபாடுகள் உள்ளன.
இந்த தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் முயற்சி செய்யும்.
வேலை வழங்குவதைவிட வேலைகளை உருவாக்குவதே எமது நோக்கம். முதற்கட்டமாக வறுமையில் வாடும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படவுள்ளது.
மேலும் அரசாங்க வேலையைப் பெறுபவர்களில் வறுமையில் உள்ளவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும். அனைத்து பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சமமான அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேயிலை, றப்பர், தேங்காய் தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் கட்டாயம் உதவி செய்யும். குறிப்பாக தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்கு அரசாங்கம் மிகவும் கவனம் செலுத்தும்.
உலகப் புகழ் பெற்ற சிலோன் டீயின் மதிப்பு தற்போது மங்கியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மீண்டும் உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளும்.
இயற்கை எழில் பொங்கும் இலங்கை, பலவிதமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ள போதிலும் உலக நாடுகளைப்போன்று இலங்கை தமது வளங்களைப் பயன்படுத்தவில்லை.
நாட்டிற்கே உரித்தான உற்பத்திகளான பத்திக், பித்தளை, ஆபரணங்கள் போன்றவற்றை விருத்தி செய்ய வேண்டும் .
கடலால் சூழப்பட்டுள்ள இலங்கைக்கு மீன் இறக்குமதி தேவையில்லை என்பதால், மீன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடிக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் உள்ள அரச அலுவலகங்கள் பலவற்றிற்கு நான் சென்றிருந்தபோது பெரும்பாலும் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அரச அலுவலகங்களில் உரிய நேரத்திற்கு சேவைகள் வழங்கப்படவில்லை என்பதே.
எனவே அரச அலுவலகங்களில் நேரத்தை வீண்விரயமாக்காமல் செயற்பட பல புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மக்கள் எதிர்பார்ப்பது போன்று 19ஆவது திருத்த சட்டம் இல்லாமல் செய்யப்டும். அதற்கு பதிலாக புதிய திருத்த சட்டமொன்று கொண்டுவரப்படும். ஒரே நாடு ஒரே நீதியின் கீழ் அனைத்தும் கொண்டுவரப்படும்.
மதம், இனம், கட்சி அனைத்தையும் கடந்த, ஒரு வளமிக்க சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் நட்புடன் அழைக்கின்றேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.