பொலிஸாருக்கும் ,பொதுமக்களுக்குமுள்ள நல்லுறவுகள் பலப்படுத்தப்படும் போதே குற்றச் செயல்களை பெருமளவில் குறைக்க முடியும். ஆகையால் பொலிஸாருக்கு பொதுமக்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் மத்துரட்ட தெரிவித்தார். பசறை மியன்கந்துர கிராமத்தின் சமூகதிட்ட மொன்றினை ஆரம்பித்து வைத்ததன் பின் அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் தலைமை வகித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வின் போது, மியன்கந்துர ஏத்பிட்டிய கிராமியப்பாதை சீரமைப்பு, வைத்திய சிகிச்சை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை போன்ற வேலைத்திட்டங்களை பதுளை பொலிஸ் அதிகாரி சுனில் மத்துரட்ட வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;” தற்போதைய நிலையில் பொலிஸாரை பலவாறாக விமர்சிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பொலிஸார் மிகவும் மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் தொடர்பாக எமக்கு கிடைக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் கவனத்திற்கு எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்ற புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற விடயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொலிஸாருடனான நல்லுறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படவேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களினால் எப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மியன்கந்துர போன்ற பின்தள்ளப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதற்கமைவான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவேண்டும்.
அதுவே மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான நல்லுறவுகள் பேணப்படவேண்டும்’ என்றார்